அஸ்ரா – செனகாவின் தடுப்பு மருந்துக்குத் தென்னாபிரிக்காவிலும் ஒரு தடைக்கல்.
தென்னாபிரிக்காவில் திரிபடைந்து பரவும் கொவிட் 19 லேசாகத் தொற்றியவருக்கு ஒரு இலேசான பாதுகாப்பையே அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்து கொடுக்கிறது என்று அந்தத் தடுப்பு மருந்துகளைத் தென்னாபிரிக்கத் திரிபடைந்த கொரோனா நோயாளிகள் மீதான ஆராய்வொன்றின் அறிக்கை தெரிவித்ததால் தென்னாபிரிக்க அரசு அம்மருந்தைத் தனது நாட்டில் பாவிப்பதைத் தள்ளிப்போட்டிருக்கிறது.
தென்னாபிரிக்காவின் விட்வோட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட ஆராய்ச்சியின் குறிப்பிட்ட கடைசி விபரங்கள் வெளிவர இருக்கின்றன. அதை அறிந்துகொண்டபின் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடன் கலந்தாலோசித்தபின்னரே அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளைப் பாவனைக்கு எடுக்கப்போவதாக அவர் அறிவிக்கிறார்.
2,000 பேர் அந்த ஆராய்சியில் பங்குபற்றினர். அவர்களின் சராசரி வயது 31 ஆகும். அஸ்ரா செனகாவின் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகள் திங்களன்று தென்னாபிரிக்காவை வந்தடையும் என்று தெரிகிறது.
இவ்வாரத்தில் மருத்துவ சேவையில் கொவிட் 19 நோயாளிகளுடன் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முதல் கட்டமாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அது திட்டமிட்டது போலவே ஆரம்பிக்கும். ஆனால், ஜோன்சன் அன்ட் ஜோன்சன், பைஸர் பயோன்டெக் ஆகியவைகளின் மருந்துகளையே பயன்படுத்தவிருக்கிறது தென்னாபிரிக்கா.
அதே சமயம் அஸ்ரா செனகா நிறுவனம் தாம் தமது தடுப்பு மருந்தைத் திரிபடைந்த தென்னாபிரிக்க ரகக் கொரோனாக் கிருமிகளையும் அழிக்கக்கூடியதாக தரமுயர்த்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்