அஇஅதிமுக-விலிருந்து தூக்கியெறியப்பட்ட ஜெயலலிதாவின் அபிமானத்துக்குரிய சசிகலாவின் கோலாகலமான சென்னைப் பிரவேசம்!

தனக்கு விதிக்கப்பட்ட நான்கு வருடச் சிறைத்தண்டனையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். 27 ம் திகதியே அவரது தண்டனைக்காலம் முடிந்துவிட்டாலும் அவர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருந்ததால் பங்களூரிலேயே அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பியிருக்கிறார்.

சசிகலாவுக்காகத் தமிழ்நாட்டு எல்லையில் பெரும் வரவேற்பு நடத்த கொரோனாக் கட்டுப்பாடுகள் இடம் கொடுக்காததால் அவருக்குச் சென்னையில் வரவேற்பு நடாத்தப்பட்டது. தனது உறவினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தினகரனுடன் அவர் 200 கார்கள் தொடரத் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஊர்வலம் சென்றார்.  

சின்னம்மா என்று தன்னுடைய ஆதரவாளர்களால் போற்றப்படும் அவர் தனது காரில் ஜெயலலிதாவின் படத்தையும் அஇஅதிமுக கொடியையும் பறக்கவிட்டிருந்தார். அக்கொடியை சசிகலா பாவிக்க அனுமதியில்லை என்று அஇஅதிமுக தலைவர்கள் சிலர் குறிப்பிட்டிருந்தாலும் அதுபற்றிய வழக்கு நடப்பதாகவும் சசிகலா தொடர்ந்தும் அதிகாரபூர்வமாக அக்கட்சியின் காரியதரிசியாக இருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.

தனது ஊரானா ஹூசூரிலிருந்து கிரிஷ்னகிரி மூலமாகச் சென்னை வரும்வரை வழியெங்கும் வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டுத் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆளும் அஇஅதிமுக கட்சிப் பிரமுகர்கள் பலரும் கூட வரவேற்புக்களில் கலந்துகொண்டதாகத் தினகரன் தெரிவித்தார். 

சசிகலாவின் சென்னைப் பிரவேசம் சுமார் இரண்டு மாதங்களாகவே பலவித அரசியல் ஊகங்களைக் கிளப்பியிருக்கிறது. அவரது நகர்வுகள் எப்படியிருக்கும், ஆளும் கட்சியினர் அவரை எப்படி எதிர்நோக்குவார்கள், வரவிருக்கும் தேர்தலில் சசிகலாவின் அழுத்தம் எப்படியிருக்கும், அஇஅதிமுகவின் தேர்தல் கூட்டான பாஜக சசிகலாவை எப்படிப் பாவிக்கும் போன்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவையாக எழுந்திருக்கின்றன.

இதற்குள் ராம் கோபால் வர்மா என்ற பிரபல சினிமா இயக்குனர் தான் “சசிகலா” என்ற பெயரில் ஒரு சினிமாவை உண்டாக்கி வருவதாகவும், அது தேர்தலுக்கு முன்னர் வெளியாகுமென்றும் டுவீட்டியிருக்கிறார். “அந்த சினிமாவின் கதை எஸ் என்ற பெண்ணும் ஈ என்ற ஆணும் தங்களுடைய தலைவருக்கு என்ன செய்தார்கள் என்று விளக்கும். மிக அருகிலிருப்பவர்களால் இலகுவில் கொல்லவும் முடியும்,” என்று அவர் தனது பதிவில் கூறியிருப்பது பலரின் ஆவலையும் தூண்டியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *