விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் சுற்றி ஆங்காங்கே செயற்கைக் கோள்களை நிறுத்தி வைக்கும் டாக்சி சேவையை பங்களூர் நிறுவனம் ஆரம்பிக்கிறது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களை வெவ்வேறு காரணத்துக்காக அனுப்புவதிலிருக்கும் தற்போதைய செலவைக் குறைக்கும் எண்ணத்திலேயே orbital transfer vehicle [OTV] என்ற திட்டத்தை ஆரம்பிக்கவிருக்கிறது பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் [Bellatrix Aerospace] என்ற பங்களூர் நிறுவனம்.
விண்வெளியில் வெவ்வேறு வட்டப்பாதைகளில் வேண்டிய இடத்தில் செயற்கைக் கோள்களை எடுத்துச் சென்று நிறுவுவதே இந்த வாகனத்தின் [OTV] செயற்பாடாக இருக்கும். எனவேதான் அதை விண்வெளி டாக்ஸி என்று குறிப்பிடலாம்.
பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் யஷாஸ் கரணம் இதை விளக்கும்போது “விண்வெளியில் வெவ்வேறு அளவிலான செயற்கைக்கோள்கள் வெவ்வேறு வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவைகளில் சிறிய கோள்களைக் குறிப்பிட்ட இடத்தில் ஸ்தாபிப்பதானால் இன்னொரு பெரிய செயற்கைக்கோள் உதவவேண்டும். எனவே சிறிய செயற்கைக்கோள்களும் பெரியவை போகுமிடத்துக்கே அனுப்பப்படுகின்றன. அச்சமயத்தில் சிறிய கோள்களுக்குப் பொருத்தமான விண்வெளிப்பாதை அமைவது சிரமமானது. அதை மாற்றியமைப்பதே எங்கள் நோக்கம்,” என்கிறார்.
பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் பெரிய செயற்கைக் கோள்களையும், சிறியவைகளையும் ஒன்றிணைத்து அவைகளுக்கேற்ற விண்பாதைகளை ஒழுங்குசெய்து கொடுக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் சேர்ந்து செயற்பட்டு வரும் பெல்லாடிரிக்ஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2023 இல் தனது சேவைகளை ஆரம்பிக்கும் என்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்