“பதவியிலிருந்து இறங்கிய ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டங்களை மதித்தாரா என்று நீதிமன்றம் விசாரிக்கலாம்!” – அமெரிக்க செனட் சபை.

“புது வருடத்தன்று தற்கொலை செய்து இறந்துபோன எனது மகனை ஜனவரி 5ம் திகதி அடக்கம் செய்தேன். 6ம் திகதியன்று எனது மகளும் அவளது கணவனும் அந்த வேதனையான வாரத்தில் என்னுடன் அருகிலிருக்க, நான் வேலைசெய்யும் பாராளுமன்றக் கட்டடத்துக்கு வந்திருந்தாரகள்.……” என்று பாராளுமன்றக் கட்டடத்துக்குள் வன்முறையிலீடுபட்ட டிரம்ப்பின் ஆதரவாளர்களுக்குப் பயந்து தனது மகளும், மருமகனும் அறையொன்றின் மேசைக்குள் கீழ் ஒளித்திருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார் ஜேமி ரஸ்கின். தான் இன்னொரு பக்கத்தால் வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு என்னாகுமென்று பயந்துகொண்டிருந்ததைப் பற்றிக் கலங்கியபடியே குறிப்பிட்டார் அவர்.  

https://vetrinadai.com/news/jamie-raskin-impeachment/

அமெரிக்க செனட் சபையில் பதவியிலிருந்து ஜனாதிபதி டிரம்ப் இறங்கிவிட்டாலும் அவரை அரசியலமைப்புச் சட்டங்களை மீறியதற்காக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கலாமா என்ற கேள்விக்கு 56-44 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் என்ற பதில் கிடைத்திருக்கிறது. அடுத்த கட்டமாக டிரம்ப் தனது ஆதரவாளர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டினாரா என்பது பற்றி இரண்டு பக்கத்தினரும் தமது வாதங்களைக் கூறவிருக்கிறார்கள்.                                             சுமார் 10 நாட்களுக்கு முன்னார் டிரம்ப்பினால் மாற்றப்பட்ட வழக்குரைஞர்கள் டிரம்ப்பை நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதற்கான தமது வாதங்களை மிகவும் பலவீனமாக முன்வைத்தார்கள் என்று விமர்சிக்கப்படுகிறது.                                                                        

முக்கியமாக ஆரம்ப வாதங்களை முன்வைத்த புரூஸ் கஸ்டர் எடுத்த விடயத்தைப் பற்றிப் பேசாமல் சுற்றிவளைத்து இழுத்தடித்ததாகப் பலராலும் சாடப்படுகிறார். டொனால் டிரம்ப்பும் அவர் மீது மிகவும் கோபமாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.     

பாராளுமன்ற அமளி துமளிகள் ஓரளவு அடங்கியபின் ஜேமி ரஸ்கின் தனது மகளையும் மருமகனையும் மீண்டும் கண்டார். “அடுத்த முறை நீ இங்கே வரும்போது நான் உன்னை என்னருகிலேயே வைத்திருப்பேன்,” என்று மகள் தபிதாவுக்குச் சொன்னார் ரஸ்கின். “பதிலாக அவள், நான் இன்னொரு முறை இங்கே வரப்போவதில்லை, என்று சொன்னாள். வேதனையான அந்த முழு வாரத்திலும் அவள் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மேலும் கலங்கவைத்தன,” என்று தனது அனுபவத்தை மேலும் விபரித்தார் ரஸ்கின். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *