வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரிட்டனுடனான பேச்சுவார்த்தைகளில் மென்மையான தனத்தைப் பேணும்படி கேட்டுக்கொள்கிறது.
“வட அயர்லாந்து வர்த்தகக் கையாளல்” பற்றிய பேசுவார்த்தைகளில் பங்குபற்றும் பிரிட்டன், மற்றும் ஒன்றியப் பிரதிநிதிகளின் கருத்துக்கள் விசனத்துக்குரியதாக இருக்கின்றன. வட அயர்லாந்தில் ஏற்கனவே இருக்கும் அரசியல் பிளவுகளை ஆழமாக்காதீர்கள்,” என்று அயர்லாந்துப் பிரதமர் மைக்கல் மார்ட்டின் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சுங்க எல்லையில் பிரிட்டனிலிருந்து வட அயர்லாந்துக்கு வரும் பொருட்களைக் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தலாது என்று கோருகிறது பிரிட்டன். பிரெக்ஸிட்டின் பின்னர் அவைகளின் சுங்கக் கண்காணிப்பால் வட அயர்லாந்து அரசியல்வாதிகள் கோபமடைந்திருக்கிறார்கள்.
அதுபற்றிய கட்டுப்பாடுகளை இரண்டு வருடங்களுக்காவது இலேசாக்கிக்கொள்வது பற்றி லண்டனில் நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் வரும் வாரங்களிலும் தொடரும் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்