ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப்.
செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின் 50 டெமொகிரடிக் கட்சியினருடன் ஏழு ரிபப்ளிகன் கட்சிக்காரரும் சேர்ந்து வாக்களித்தனர்.
ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்ததுபோலவே டிரம்ப் இரண்டாவது தடவையாகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிராக நடந்தாரென்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பியிருக்கிறார். இது ரிபப்ளிகன் கட்சியினரிடையே டிரம்ப்புக்கு இருந்துவரும் ஆதரவை மட்டுமன்றி கட்சிக்குள் நடந்துவரும் கோட்பாட்டு விரிசலையும் காட்டுகிறது.
லிஸ் சேனி, மிச் மக்கார்த்தி போன்று பகிரங்கமாக டிரம்ப் தான் ஜனவரி 06 வன்முறைகளுக்குக் காரணமானவர் என்று குற்றஞ்சாட்டி வந்தவர்களும் கூட வாக்களிப்பில் அவருக்குச் சாதகமாகவே வாக்களித்தார்கள். வாக்கெடுப்பு முடிந்தபின் மிச் மக்கொனால் “பாராளுமன்றத்தில் வன்முறைக் குற்றங்களில் இறங்கியவர்களின் நடத்தைக்குச் சகல வழிகளிலும் டிரம்ப்பே காரணம்,” என்று பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தெரிவித்தார்.
தமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் மிகக்குறுகிய நேரத்தையே டிரம்ப்புக்கு ஆதரவான வாதங்களை முன்வைப்பதில் செலவிட்ட டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் ஓய்வுபெற்றபின்னர் சனியன்று மேலும் சாட்சிகளை வரவழைத்து டிரம்ப்பின் நடவடிக்கைகளை வெளிப்படுத்தப்போவதாக டெமொகிரடிக் கட்சிக்காரகள் அறிவித்தார்கள். பின்னர் அச்சாட்சிகள் எழுத்தில் கையளிக்கப்படும் என்றார்கள். ஆனால், திடீரென்று தமது நிலைப்பாட்டிலிருந்து மாறிய அவர்கள் வேகமாக வாக்கெடுப்பை முடித்துக்கொள்ளவேண்டுமென்று ரிபப்ளிகன் கட்சியினருடன் சேர்ந்து முடிவெடுத்தார்கள்.
டெமொகிரடிக் கட்சியினரின் அந்த நடவடிக்கைகள் கடைசி நேரத்தில் குளறுபடியாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது. அதற்கான காரணம் விசாரணைகள் வாரங்கள், மாதங்களாக இழுபடுமானால் ஜோ பைடன் கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகளால் பாதிப்பப்பட்டிருக்கும் அமெரிக்க மக்களுக்கு உதவுவதற்காக முன்வைக்கவிருக்கும் மிகப்பெரிய தொகையிலான உதவித் திட்டங்கள் பற்றி செனட்டில் முடிவெடுக்க முடியாமல் இழுபடும் என்று குறிப்பிடப்படுகிறது.
அத்தொகையைக் குறுக்கவேண்டுமென்று ஒரு பகுதி ரிபப்ளிகன் கட்சியினர் வேண்டினர். அவர்களைச் சமாதானப்படுத்தி உதவித்தொகையின் அளவைக் குறைக்காமலிருக்க ஆதரவு பெற வேண்டியே டெமொகிரடிக் கட்சியினர் வேகமாக டிரம்ப்பின் மீதான வழக்கை முடித்துக்கொள்ள விரும்பினர்.
தான் நிரபராதிகாக விடுவிக்கப்பட்டதைப் பெருமையுடன் குறிப்பிட்ட டிரம்ப் நடந்தது கேலிக்கூத்து என்றும் ஒரு அரசியல் வஞ்சம் என்றும் சாடினார். இந்த வெற்றி அவருக்கு மேலும் பலம் சேர்த்து மீண்டும் 2024 தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகக் குதிக்க உதவும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்