துருக்கியில் சுமார் 718 குர்தீஷ் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டார்கள்.
துருக்கிய அரசியலில் குர்தீஷ் மக்களுக்கு ஆதரவளிக்கும் கட்சியான HDP இன் அரசியல்வாதிகள் சுமார் 718 பேரைத் துருக்கி கைது செய்திருக்கிறது. நாட்டின் சுமார் 400 மாவட்டங்களிலும் அவர்களை வளைத்துக் கைதுசெய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அக்கட்சி துருக்கியின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியாகும்.
குர்தீஷ் தொழிலாளர் கட்சி (PKK) என்ற பெயரில் துருக்கி, ஈரான், ஐரோப்பிய ஒன்றியம், நாட்டோ போன்றவர்களால் தீவிரவாத அமைப்பு என்ற பட்டியலில் வைக்கப்பட்டிருப்பவர்களுடன் கூட்டுறவு கொண்டிருப்பதாகவே அந்த குர்தீஷ் அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதன் பின்னணியாக வட ஈராக்கில் துருக்கியின் எல்லைக்கருகேயிருக்கும் பிராந்தியத்தில் குர்தீஷ் தொழிலாளர் கட்சியினரால் கடத்தப்பட்ட 13 துருக்கர்கள் கொல்லப்பட்டதே காரணம். அவர்களில் இராணுவத்தினர், பொலீசார், சாதாரண குடிமக்கள் அடங்குவர். ஈராக்கினுள் செயற்படும் குர்தீஷ் போராளிகள் தனது எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்டுத் துருக்கி ஈராக்கினுள் நுழைந்து அடிக்கடி தாக்குவதுண்டு.
அப்படியாக துருக்கிய இராணுவம் குர்தீஷ் போராளிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் மலைப்பிராந்தியமொன்றினுள் நுழைந்து தேடியபோது குகையொன்றுக்குள் குறிப்பிட்ட 13 துருக்கர்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாகத் துருக்கிய உள்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களில் 12 பேர் தலையில் சுடப்பட்டும் ஒருவர் தோள் பகுதியில் சுடப்பட்டும் இறந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
குர்தீஷ் போராளிகளிடமிருந்து அதுபற்றி எவ்வித அறிவித்தலும் வெளியாகவில்லை. துருக்கிய HDP கட்சியினரோ அதற்கும் தமக்குச் சம்பந்தமில்லையென்றும் கொல்லப்பட்டவர்கள் துருக்கியின் குண்டுகளால் இறந்திருக்கலாமென்றும் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்