அமெரிக்காவின் பிரபல வானொலி நட்சத்திரம் ரஷ் லிம்பெக் மறைந்தார்.
கடந்த 30 வருடங்களாக அமெரிக்க வானொலி அலைகளில் பரவிவந்த ”The Rush Limbaugh Show” நிகழ்ச்சியின் நட்சத்திரம் ரஷ் லிம்பெக் தனது 70 வயதில் மறைந்தார். நுரையீரல் புற்றுநோய் அவரது இறப்புக்குக் காரணமாக இருந்தது.
வாராவாரம் 13 மில்லியன் அமெரிக்கர்கள் கேட்கும் அவரது வானொலி நிகழ்ச்சியே நாட்டின் மிகப்பெரிய, பிரபல நிகழ்ச்சியாக இருந்து வந்தது. அவரது ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் பழமைவாதிகள், மாஜி ஜனாதிபதி டிரம்ப்பின் ஆதரவாளர்களாகும்.
லிம்பெக் வானொலி நிகழ்ச்சியானது அமெரிக்காவின் பழமைவாதிகளை ஒன்றுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. குடியேற்றவாதிகளின் நாடாக அமெரிக்கா இருப்பதை விரும்பாத, கால்நிலை மாற்றங்கள் ஏற்படுவது புரட்டு போன்ற கருத்துக்களை லிம்பெக் தனது ரசிகர்களிடையே பரப்பினார்.
அதே சமயம் எதிர்க்கட்சியினரால் வெறுக்கப்பட்டவர் லிம்பெக். கொரோனாத் தொற்று வெறும் ஜலதோஷம் போன்றதே என்று குறிப்பிட்ட அவர் அது டிரம்ப்பின் புகழை மறைக்கப் பயன்படுத்தப்படும் புரட்டு என்றார். தேர்தலில் டிரம்ப் தோற்றது உண்மையல்ல என்ற டிரம்ப்பின் கூற்றையும் ஆதரித்தார். தனக்குப் பிடித்த லிம்பெக்குக்கு கடந்த வருடம் ”Medal of Freedom” பதக்கம் அணிந்து கௌரவித்தார் டிரம்ப்.
சாள்ஸ் ஜெ. போமன்