கடும் உறைபனியால் கிரீஸின் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகள் நீர், மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
நாற்பது வருடங்களுக்குப் பின்னர் கிரீஸின் தலைநகரான ஏதன்ஸை உறைபனி கடுமையாகத் தாக்கியிருக்கிறது. வழக்கத்துக்கு மாறாக விழுந்திருக்கும் கடும் உறைபனியால் போக்குவரத்துகளெல்லாம் பாதிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் நான்கு நாட்கள் மின்சாரம், நீர் வசதியின்றித் தவிக்கிறார்கள்.
நீண்ட காலமாகவே தம் அரசியல்வாதிகள் மேல் கொதிப்படைந்திருக்கும் மக்கள் அத்தியாவசியமான வசதிகளை இழந்ததால் மேலும் கோபமடைந்திருக்கிறார்கள். நகரின் ஒவ்வொரு அதிகாரங்களும் வேறொரு திணைக்களத்தைக் காரணமாகச் சுட்டிக்காட்டிப் பழிபோடுகின்றன.
கிரீஸ் பிரதமர் “ஏற்பட்டிருக்கும் நிலைமைக்குக் காரணம் முன்னர் இருந்த அரசாங்கங்கள் தமது முக்கிய பொறுப்புக்களை உதாசீனம் செய்து வந்ததாகும்,” என்கிறார்.
ஏற்பட்டிருக்கும் இடர்களெல்லாம் சீர் செய்யப்பட்டபின் மின்சாரம், நீர் போன்ற அவசிய தேவைகள் உறைபனி விழுந்ததால் ஒழுங்காக விநியோகிக்க முடியாமல் போனதற்கான காரணங்கள் ஆராயப்படுமென்று அரசாங்கத் தரப்பில் அறிக்கை விடப்பட்டுள்ளது.
சாள்ஸ் ஜெ. போமன்