திட்டப்படி தேர்தல்களை நடத்தாத சோமாலியாவின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் உண்டாகியிருக்கின்றன.
பெப்ரவரி 8 ம் திகதி தேர்தல்கள் நடப்பதாக சோமாலியாவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தல்களின் பிரதிநிதித்துவத்தை வைத்துப் புதிய அரசின் அதிகாரங்களை எப்படிப் பிரிப்பது என்பது பற்றி உள்நாட்டுக் குலங்களுக்குள்ளே வேற்றுக் கருத்துகளால் அத் தேர்தல் எப்போது நடக்குமென்று தெரியாத நிலைமை உருவாகியிருக்கிறது
தேர்தல் நடத்தாததைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து ஊர்வலமொன்றை நாட்டின் தலைநகரான மொகடிஷுவில் நடாத்தினார்கள். அதற்கு முதல் நாள் இரவு சில எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கியிருந்த ஹோட்டலை இராணுவம் தாக்கியது.
அதையடுத்த நாள் திட்டமிடப்பட்டிருந்த ஊர்வலத்தில் இராணுவத்தினருடன் கைகலப்புக்கள், துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றன. ஐந்து இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். ஊர்வலத்தில் சென்றவர்களில் சுமார் பதினைந்து பேர் தாக்குதலில் காயமுற்றார்கள்.
ஊர்வலம் அமைதியாக நடக்கவிடாமல் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சியினர் சீண்டப்பட்டிருக்கிறார்கள். “அரசாங்கம் இப்படித்தான் நடக்குமானால் நாமும் திருப்பியடிக்கத் தயார்,” என்று சூளுரைத்திருக்கிறார்கள்.
தேர்தல் நடக்காததாலும், அமைதியாக நடந்த எதிர்ப்பு ஊர்வலம் குழப்பப்பட்டதையும் கண்டித்து சோமாலியாவில் முதலீடுகள் செய்திருக்கும் எமிரேட்ஸ் கண்டனம் தெரிவித்துத் தமது விசனத்தையும் தெரிவித்திருக்கிறது. அதை சோமாலியாவின் ஜனாதிபதியோ அரசோ விரும்பவில்லை. “குறிப்பிட்ட வெளிநாடொன்று அனாவசியமாக எங்கள் அரசியலுக்குள் மூக்கை நுழைத்து வருகிறது,” என்று சோமாலிய அரசு சாடியிருக்கிறது.
சோமாலியாவின் ஒரு சுயாட்சி மாநிலமான சோமாலிலாந்துடனும், இன்னொரு மாநிலமான புந்த்லாந்துடனும் எமிரேட்ஸ் தனது நிறுவனமொன்றின் மூலமாக அவர்களுடைய துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய உதவுவதாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. அவ்வொப்பந்தங்கள் சோமாலிய மத்திய அரசின் ஒப்புதலின்றி நடந்ததாக சோமாலிய அரசு எமிரேட்சுடன் கோபமாக இருக்கிறது.
சோமாலிலாந்து, புந்த்லாந்து பகுதிகள் சோமாலியாவில் ஓரளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளாகவும், உள்நாட்டுக் குழப்பங்கள் இல்லாதவையாகவும் இருந்து வருகின்றன. அத்துடன் சோமாலிலாந்து தன்னைத் தனி நாடாகப் பிரகடனம் செய்திருப்பதைச் சோமாலியா ஏற்றுக்கொள்ளவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்