மியான்மாரில் பல மில்லியன் மக்கள் இராணுவத்தின் மீது தங்கள் அதிருப்தியைக் காட்டினார்கள்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான கூட்டம் திங்களன்று மிகப் பெரியதாகியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிக்கு இறங்க, மக்களும் சேர்ந்து பல நகரங்களில் ஊர்வலம் சென்றார்கள்.
எதிர்ப்பு ஊர்வலங்களில் சென்றவர்களில் இதுவரை நாலு பேர் இராணுவத்தின் தாக்குதலால் இறந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மிக அருகில் நெற்றியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவதை அதிகரிக்க இராணுவத்தினரும் தமது பிடியை இறுக்கிவருவதைக் காணமுடிவதாகத் தெரியவருகிறது. பல நகரங்களிலும் இராணுவம், பொலீஸ் மற்றும் இரகசியப் பொலீசார் பேரணிகளில் செல்பவர்களுக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.
இராணுவத்துடன் சேர்ந்து மக்களைத் தாக்குகிறவர்கள் “மவதாங்” என்றழைக்கப்படும் தேசியவாதப் புத்தமத பிக்குகள் என்பது பலரால் படமாக்கப்பட்டுள்ளது. “மியான்மாரின் உண்மையான பாதுகாவலர்கள் இராணுவத்தினரே,” என்று கூச்சலிட்டபடி இந்தப் பிக்குகள் கூட்டம் ஊர்வலங்களும் நடாத்தி வருவதாகத் தெரிகிறது. இந்தப் புத்தப் பிக்குகள் இயக்கத்தின் கோட்பாடு, நடவடிக்கைகள் போன்றவை சிறீலங்காவின் தேசியவாதப் புத்தமத இயக்கங்கள் போன்றவை என்று ஒப்பிடப்படுகிறது.
நூற்றுக்கணக்கானவர்கள் திங்களன்று ஊர்வலங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்தும் எதிர்ப்பைக் காட்டுகிறவர்களைக் கைது செய்யப்போவதாக இராணுவம் எச்சரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்