சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி.
2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உடந்தையாக இருந்த எயாத் அல்-கரீப் என்ற சிரியரை ஜேர்மனியின் நீதிமன்றம் மனித குலத்துக்கெதிரான குற்றங்களுக்காகத் தண்டித்துத் தீர்ப்பளித்தது.
2012 இல் தானே சிரிய அரசின் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் தப்பிய எயாத் அல்-கரீப் துருக்கி, கிரீஸ் வழியாகத் தப்பியோடில் 2013 இல் ஜேர்மனியில் வந்து அரசியல் தஞ்சம் கோரினான். அச்சமயத்தில் ஜேர்மனிய அதிகாரிகளுக்குத் தனது நடவடிக்கைகளை விபரித்திருந்தான். அவ்விபரங்களிலிருந்து தமது தேடுதல்களை ஆரம்பித்த ஜேர்மனிய பொலீஸ் அவனது வார்த்தைகளை நிரூபிக்கும் முகமாக விசாரித்து சிரியாவின் சித்திரவதைக் கூடமான Branch 251 க்குப் பலரை அனுப்பியிருக்கிறான் என்பதை விளங்கிக்கொண்டது.
நீதிமன்ற விசாரணைகளில் சிரிய அரசுக்குத் தான் வேலை செய்திருக்காவிடின் தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பின்றிப் போயிருக்கும் என்று எயாத் அல்-கரீப் அழுதுகொண்டே தெரிவித்தான். ஆயினும், அவனது செய்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றிப் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி சொன்னதிலிருந்து அவனது செயல்களின் முக்கியத்துவம் வெளியாகியது. எனவே, அவனுக்கு ஐந்தரை வருடங்கள் சிறைத்தண்டனை கோரியிருக்கிறது ஜேர்மன் அரசு.
சிரியாவில் நடாத்தப்பட்ட குற்றங்களுக்காக ஜேர்மனைத் தவிர பிரான்ஸ், சுவீடன் நாடுகளிலும் சில சிரியர்கள் மீதான விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எயாத் அல்-கரீப்பின் வழக்கு இவ்வகையில் உலகில் முதலாவதாகும். பொலீஸ் ஒற்றன் ஒருவனால் சிரியாவின் சித்திரவதைக் கூடங்களில் எடுக்கப்பட்ட 50,000 படங்களும் இவ்வழக்குகளுக்காகப் பாவிக்கப்படுகின்றன.
இவனைத் தவர அன்வர் ரஸ்லான் என்ற மேலுமொரு சிரிய உயரதிகாரியாக இருந்தவன் பற்றிய விசாரணையும் ஜேர்மனியில் நடந்து வழக்குத் தொடருகிறது. 58 வயதான ரஸ்லான் 58 பேரின் கொலைகளுக்கும், 4,000 பேரின் சித்திரவதைக்கும் நேரடிப் பொறுப்பாளனாக இருந்தவன் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்