ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தின் முதலமைச்சரைக் கொல்லத் திட்டமிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்.

புதனன்று அதிகாலையில் ஜெர்மனியின் சக்சனி மாநிலத்தில் பல வீடுகளில் பொலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். தடுப்பூசி எதிர்ப்பாளர்களான ஒரு தீவிரவாதக் குழுவினர் அந்த மாநில ஆளுனரைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதன் பேரிலேயே குறிப்பிட்ட அங்கத்துவர்களின் வீட்டில் அச்சோதனைகள் நடாத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

டிரெஸ்டன் நகரின் ஹைதனாவ் நகரப்பகுதியொன்றில் பொலீசார் குறிப்பிட்ட குழுவினரின் வீடுகளில் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கிடைத்த துப்பின் பேரில் அத்தேடுதல்களை நடத்தினார்கள். அதன் பின்னர் சுமார் 6 பேர் மீது சந்தேகம் மேலும் அதிகரித்திருப்பதாகப் பொலீசார் தெரிவித்தார்கள். 

குறிப்பிட்ட குழுவினர் ஆளுனர் மற்றும் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மிரட்டும் செய்திகள் அனுப்பியதாகச் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜெர்மனியிலேயே குறிப்பிட்ட மாநிலத்தில்தான் தடுப்பு மருந்து போடாதவர்களின் விகிதம் அதிகம். அங்கேயே மிக அதிகமான கொவிட் கட்டுப்பாடுகள்- தடுப்பூசி எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்