தடுப்பூசி வரிசைக்குள் நுழைந்த ஆர்ஜென்ரீனப் பிரமுகர்களால் நாடெங்கும் எதிர்ப்பு ஊர்வலங்கள்.
உலகின் சில நாடுகளில் அந்தந்த நாட்டு மக்கள் ஆரோக்கிய சேவையால் திட்டமிடப்படும் கொவிட் 19 தடுப்பு மருந்து வரிசைக்குள், அதிகார வர்க்கத்துக்கு வேண்டப்பட்டவர்கள் நுழைந்து தமக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். இதனால் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. சில நாடுகளில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பதவி விலகவேண்டியதாகிறது.
அந்த வரிசையில் சமீபத்தில் தென்னமெரிக்க நாடான ஆர்ஜென்ரீனாவிலும் அரசியல்வாதிகள் செய்த தவறு மக்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு வாரங்களுக்கு முதல் நாட்டின் பத்திரிகையாளரொருவர் அதை வெளிப்படுத்த ஆரம்பித்தார். நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சருடன் தனக்கிருந்த தொடர்பை வைத்துத் தான் தடுப்பூசி பெற்றுக்கொண்டதாக அவர் பகிரங்கப்படுத்த, அதனையொட்டி மேலும் பலரின் பெயர்கள் வெளிவந்தன. ஜனாதிபதி தனது அமைச்சரைப் பதவியை விட்டு விலகச் சொன்னதுடன் வரிசைக்கிடையே புகுந்தவர்களின் பெயர்களையும் விசாரித்து வெளிப்படுத்தினார்.
சுமார் 45 மில்லியன் மக்கள் தொகையுள்ள ஆர்ஜென்ரீனாவின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 51,000 பேர் இறந்திருக்கிறார்கள். ரஷ்யாவின் ஸ்புட்நிக் V, இந்தியாவிலிருந்து கொவிஷீல்ட், சீனாவிலிருந்து சினோபார்ம் ஆகிய தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொண்ட ஆர்ஜென்ரீனா நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்கே முதல் கட்டமாக தடுப்பு மருந்துகளைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தது. அதைத் தவிர புவனர்ஸ் அயர்ஸ் பகுதியின் + 70 வயதானவர்களும் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள்.
குறுக்கே நுழைந்து தடுப்பு மருந்தைப் போட்டுக்கொண்டவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி, அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் 38 வயதான பொருளாதார அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் “எங்கள் தடுப்பு மருந்துகளைக் களவெடுக்காதே”, போன்ற கோஷங்களுடன் அரசியல்வாதிகளின் பெயர்கொண்ட பொம்மைகளைக் சாவுப்பைகளுக்குள் கட்டித் தொங்கவிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்