மோதல் இலக்கம் 1,000, உலகக்கோப்பை கோல்கள் 9 உடன் தன் விசிறிகளை குதூகலப்படுத்திய மெஸ்ஸி.

பதினாறு அணிகளுக்கிடையே நடக்கும், “வெற்றியில்லையே வெளியேறு” நிலைக்கு கத்தார்2022 வந்துவிட்டது. சனியன்று அந்த மோதல்களில் முதலாவதாக அமெரிக்காவுடன் மோதியது நெதர்லாந்து. உதைபந்தாட்டத்தில்  ஐரோப்பிய நுட்பமும், அமெரிக்க நுட்பமும் எப்படியிருக்கும் என்பதை ரசிகர்களுக்கு காட்டிய மோதலாக அது இருந்தது. நெதர்லாந்து அணி இதுவரை விளையாடியதை விட வேகமாகவும், சுற்றிச் சுழன்றும் விளையாடி அமெரிக்கர்களைத் திணறடித்து 3 – 1 என்ற வித்தியாசத்தில் வென்றார்கள். அவர்களுடைய விளையாட்டுத் திறமை மோதல் நேரம் முழுவதும் பிரகாசித்தது.

இரண்டாவது மோதல்களில் சந்தித்தவர்கள் ஆர்ஜென்ரீனாவும் ஆஸ்ரேலியர்களும். இதுவரை தான் சந்தித்த மோதல்களில் தனது ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தவில்லை ஆர்ஜென்ரீனா அணி. இந்த மோதலிலும் முதல் பகுதியில் ஆஸ்ரேலியர்களே பெருமளவில் மோதலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆயினும் அவர்கள் விட்ட ஒரு ஓட்டைக்குள் படு வேகமாகப் பந்தை வலைக்குள் அடித்துத் தள்ளினார் லயனல் மெஸ்ஸி. 

அந்த எண்ணிக்கையை 2 – 0 என்ற எண்ணிக்கைக்கு இரண்டாம் பகுதி விளையாட்டில் உயர்த்தினார் ஜூலியன் ஆல்வாரஸ். அதன் பின்பு வேட்டையாடுவது போல அலைந்தார்கள் ஆஸ்ரேலியர்கள். ஒரு தடவை வெற்றிபெற்றபோது ஆஸ்ரேலியாவின் கிரேக் குட்வின்ஸ் வலைக்குள் அடித்த பந்து ஆர்ஜென்ரீன வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் காலில் பட்டு வலைக்குள் நுழைந்தது. 2 – 1 ஆனபின்னர் ஆஸ்ரேலியர்கள் மேலும் உக்கிரத்துடன் விளையாட ஆரம்பித்தார்கள். முடியும் கடைசி நிமிடத்தில் ஆஸ்ரேலிய வீரரொருவருக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவும் செய்தது. ஆனால், கோட்டை விட்டுவிட்டார்.

லயனல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை மோதல்களுக்கு வரும்போது நடத்தவிருந்த சாதனைகளை வெற்றிகரமாக்கும் மோதலாகவும் அமைந்திருந்தது ஆஸ்ரேலியாவுடனான மோதல். அவர் தனது தேசிய அணிக்காக 1,000 வது மோதலில் பங்குபற்றினார். தனக்கு முன்னர் ஆர்ஜென்ரீனாவில் இன்னொரு நட்சத்திரமாக இருந்த மரடோனா உலகக் கோப்பை மோதல்களில் 8 கோல்கள் போட்டிருந்ததைத் தனது 9 கோல் போட்டதன் மூலம் மெஸ்ஸி கடந்தார். 

09 ம் திகதி வெள்ளிக்கிழமையன்று நெதர்லாந்து அணியை நேரிடவிருக்கிறது ஆர்ஜென்ரீனா.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *