போர்த்துக்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற தென் கொரியா அடுத்ததாக பிரேசில் அணியைச் சந்திக்கும்.

கத்தார் 2022 முதல் சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமையன்று முடிவுக்கு வந்தன. கடைசி நாளும் உதைபந்தாட்ட ரசிகர்கலுக்கு ஆச்சரியங்களைக் கொடுக்கத் தவறவில்லை. தென் கொரியா தனது மோதலில் போர்த்துக்காலை வீழ்த்தியது. பல தடவைகள் கைகலப்பு நிலைமை வரை சென்ற மோதலில் செர்பியாவை வென்று மூன்றாவது தடவையாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது சுவிற்சலாந்து.  அடுத்த கட்டமான 16 தேசிய அணிகளுக்கிடையிலான மோதல்களில் யாரை யார் சந்திப்பார்களென்றும் தெரிந்தாயிற்று. சனிக்கிழமையன்று ஆரம்பிக்கும் அம்மோதல்கள் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையும்.  

தென் கொரியாவை எதிர்கொண்ட போர்த்துக்கால் அணி 1 – 2 என்ற வித்தியாசத்தில் தோல்வியுற்றது. நட்சத்திர வீரர் ரொனால்டோ மீண்டுமொருமுறை மைதானத்தில் இருந்து எந்த கோலும் போடமுடியாமல் 65 வது நிமிடத்தில் வெளியேறினார் கோபத்துடன். தன்னை, “கெதியாக வெளியேறு,” என்று சொன்ன தென் கொரிய வீரரொருவர் மீது முறுகிவிட்டு அவர் வெளியேறியதை எல்லோரும் காண முடிந்தது.

செர்பியாவுடன் மோதிய சுவிஸ் 3 – 2 என்ற வித்தியாசத்தில் வென்றது. ஆரம்பக் கட்டத்தில் மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்த அந்த மோதலின் இடையில் ஒரு கட்டத்தில் செர்பியா 2 – 1 என்று கோல் போட்டிருந்தது. மீண்டும் விழித்தெழுந்த சுவிஸ் வீரர்கள் தமது எண்ணிக்கையைக் கூட்டியபின்பு மைதானம் போர்க்களம் போலானது. பல தடவைகள் இரண்டு தரப்பினரும் கைகலப்பில் இறங்கும் நிலை உருவாகி நடுவரிடம் மஞ்சள் எச்சரிக்கைகளை அடுக்கடுகாகப் பெற்றுக்கொண்டனர். 

தோற்றுப்போன இன்னொரு நட்சத்திர அணி பிரேசிலைச் சேர்ந்தது. அவர்களைக் கமரூன் 1 – 0 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தினர். ஆனாலும், அதிர்ஷ்டம் கமரூன் பக்கம் இல்லை. அவர்களை விட அதிக புள்ளிகளை ஏற்கனவே பெற்றிருந்த பிரேசில் முன்னேற, கமரூன் தேசிய அணி பெட்டிகளைக் கட்டுகிறார்கள் நாடு திரும்ப. இன்னொரு மோதலில் பங்குபற்றினர் கானாவும், உருகுவேயும். 2 – 0  என்ற வித்தியாசத்தில் உருகுவே அணி வென்றாலும்கூட, இருவரும் மேற்கொண்டு முன்னேறும் அளவு புள்ளிகளைப் பெறவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *