அண்டார்டிகாவின் ஒரு பாகத்திலிருந்து வெடித்துப் பிளந்து தனியாகிய உறைபனிப்பாறை.
நிரந்தரமாக உறைந்திருக்கும் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறையிலிருந்து ஒரு மிகப்பெரிய உறைபனித்தளம் வெடித்துப் பிரிந்ததாக விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். இது நியூ யோர்க்கின் அளவைவிட மிகவும் பெரியதாகும். இதன் அளவு சுமார் 1,270 சதுர கி,மீற்றர்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பிளந்து தனியாகியிருக்கும் பகுதிக்கான பிளவு நவம்பர் 2020 இல் ஆரம்பித்ததாக அருகேயிருக்கும் கண்காணிப்பு மையத்திலிருக்கும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அது வேகமாகப் பெரிதாகி வெள்ளியன்று திடீரென்று பிளந்ததாக அவர்களின் கூற்றிலிருந்து அறியலாம். இது நடக்குமென்று அவர்கள் பல ஆண்டு கணித்திருந்திருக்கிறார்கள்.
இப்படியான பிளவுகள் சாதாரணமாக நடப்பவையே என்றும் காலநிலை மாற்றத்துக்கும் இதற்கும் நேரடியான தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லையென்றும் தெரியவருகிறது. பிளந்து தனியாகிய அந்தப் பனிப்பாறை சில வாரங்களுக்கோ, மாதமோ அவ்விடத்திலேயே மிதக்கும். சில சமயத்தில் அது அங்கிருந்து விலகி நீரோட்டத்துடன் போகலாம் அல்லது மீண்டும் பக்கத்திலுள்ள உறைபனிப் பாறைகளுடன் ஒட்டிக்கொள்ளலாம் என்பது வழக்கமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்