ஒரு வழியாக ஆபிரிக்க நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் வந்து இறங்கிக்கொண்டிருக்கின்றன.

உலகின் மற்றைய பாகங்கள் போல ஆபிரிக்காக் கண்டமெங்கும் பொதுவாக கொவிட் 19 தனது கைவரிசையைக் காட்டவில்லையென்றாலும் ஆங்காங்கே சில நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஆபிரிக்க நாடுகள் பல தமக்கான தடுப்பு மருந்துகளைப் பெறும் வசதியற்றிருந்ததால் ஐ.நா-வின் கொவக்ஸ் திட்டத்தால் தடுப்பு மருந்துகள் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையிலிருந்தன. 

ஆரம்பத்தில் பெரிதாக நம்பப்பட்ட கொவக்ஸ் திட்டம் எதிர்பார்த்தது போல தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களிடம் மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உலகின் பணக்கார நாடுகள் தயாரிப்பில் பெரும்பான்மையான தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொண்டிருந்தன. அதனால், கடும் விமர்சனத்தைச் சந்தித்த கொவக்ஸ் திட்டம் ஒரு வழியாக உயிர்ச்சக்தி பெற்று, தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்து ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டிருக்கிறது என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

செனகல் முதல் ருவாண்டா வரை, சூடானிலிருந்து அங்கோலா வரை அந்தந்த நாட்டு அரசியல் தலைவர்கள் விமான நிலையங்களில் வந்திறங்கும் கொவக்ஸ் திட்டத்திலான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வது ஆபிரிக்கத் தொலைக்காட்சிகளில் பரவலாகக் காட்டப்பட்டு வருகிறது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகளின் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட கென்யாவுக்கு அஸ்ரா செனகாவின் ஒரு மில்லியன் தடுப்பு மருந்துகள் கிடைத்திருக்கின்றன. குட்டி நாடான ருவாண்டாவுக்கு கடும் குளிரில் பாதுகாக்க வேண்டிய pfizers/biontech நிறுவனத்தில் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆபிரிக்காவின் மக்கள் தொகையில் முதலாவதான நாடு நைஜீரியாவுக்கு ஒழுங்குசெய்யப்பட்ட 12 மில்லியன் தடுப்பு மருந்துகளில் நான்கு மில்லியன் சமீபத்தில் அங்கே போய்ச் சேர்ந்திருக்கிறது. 

பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் மார்ச் மாதக்கடைசியில் தங்கள் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பிக்கவிருக்கின்றன. முதல் கட்டமாக நாடுகளின் மருத்துவ சேவையாளர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்படும். ஒரு பில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஆபிரிக்காவின் 100,000 பேரைப் பெருந்தொற்று கொன்றிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *