ஆபிரிக்காவின் குட்டி நாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்களில் சுமார் நூறு பேர் பலியானார்கள்.
மிகச் சிறிய நாடான எகுவடோரியல் கினியா எரிநெய் மற்றும் கனிம வளங்களைக் கொண்ட ஒரு வளமான நாடு. சுமார் 28,000 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட நாட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 800.000 மட்டுமே. மனித உரிமை மீறல்களுக்குப் பெயர் பெற்ற இந்த நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்களால் சர்வதேசத்தின் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கிறது.
ஞாயிறன்று பத்தா என்ற கரையோர நகரொன்றில் இராணுவ ஆயுதக் கிடங்குக்கு அருகே ஏற்பட்ட தீவிபத்திலிருந்து குண்டு வெடிப்புக்கள் ஆரம்பித்தன. அப்பிராந்தியத்தில் விவசாயிகளின் கவனக்குறைவாலேயே அத்தீவிபத்து ஆரம்பமானது என்று குறிப்பிடப்படுகிறது. அதையடுத்துத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்துக்களில் ஏகப்பட்ட கட்டடங்கள் சிதறின. 31 பேர் இறந்ததாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.
வெடிவிபத்துக்களில் சிதறியவைகளில் நாட்டின் நான்கு மருத்துவசாலைகளும் அடக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரான 200,000 வாழும் நகரான பத்தாவின் சகல கட்டடங்களும் இடிபாடுகளாகியதாக மக்கள் ஆரோக்கிய அமைச்சின் செய்திகள் குறிப்பிடுகின்றன.
உதவி சேவைகள் இடிபாடுகளிடையே தேடிப் பலரை உயிரோடும், காயங்களோடும் வெளியே எடுத்தனர். அதன் பின்னர் 98 பேர் இறந்திருப்பதாகவும் சுமார் 600 பேர் காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஜனாதிபதி தமது மக்களுக்கு உதவும்படி உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்