ஐந்து வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ராய்பூரில் இறங்கிய பங்களாதேஷ் விமானம் இன்னும் தரையில் தான்!
ஆகஸ்ட் 2015 இல் டாக்காவிலிருந்து மஸ்கட்டை நோக்கிப் பறந்து சென்றது ஒரு பங்களாதேஷின் யுனைட்டட் ஏர்வேய்ஸ் விமானம். இடையே அவ்விமானத்தில் இயந்திரக் கோளாறு உண்டாகவே அது சத்திஸ்கார் மாநிலத் தலைநகரான ராய்பூரில் அவசரமாக இறங்க அனுமதி பெற்று இறங்கியது. அந்த விமானம் தொடர்ந்தும் ராய்பூர் விமான நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் அந்த இயந்திரப் பழுதுகளை பங்களாதேஷிலிருந்து வந்து திருத்திவிட்டார்கள். ஆனாலும், ராய்பூரின் சுவாமி விவேகானத்தா விமான நிலையத்தில் தான் விமானம் தொடர்ந்தும் நிற்கிறது. அது எப்போது அங்கிருந்து எடுக்கப்படுமென்று முடியைப் பிய்த்துக்கொண்டு யோசிக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள்.
விமானத்தை அங்கே நிறுத்துவதற்கான கட்டணம் மணிக்கு 320 ரூபாயாகும். அது மட்டுமே தற்போது 1.54 கோடி ரூபாய்களைத் தாண்டிவிட்டது. கொரோனாக் காலமாததால் விமானங்களை நிறுத்திவைப்பதற்கான இட நெருக்கடியும் இருப்பதாக விமான நிலையத்தினர் குறிப்பிடுகிறார்கள்.
நீண்ட காலமாக அந்தத் தனியார் விமான நிறுவனத்திடமும், பங்களாதேஷ் அதிகாரிகளிடமும் பல வித தொடர்புகள் கொண்டும் பதிலெதுவுமே கிடைக்கவில்லை ராய்பூர் விமான நிலையத்தினருக்கு. அவர்கள் பங்களாதேஷ் தூதுவராலயம் மூலம் தொடர்புகொண்டும் எதுவித பலனுமில்லை என்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்