ஸ்கானியா பாரவண்டிகளை இந்தியாவுக்கு விற்பதில் இந்திய அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.
ஜெர்மனிய, சுவீடிஷ் பத்திரிகையாளர்கள் செய்திருக்கும் ஆராய்வுகளிலிருந்து சுவீடிஷ் நிறுவனமான ஸ்கானியா தனது இந்திய வியாபாரங்களில் லஞ்ச ஊழல்கள் செய்திருப்பது வெளியாகியிருக்கிறது. 2013 – 2016 காலத்தில் நடந்த இந்த ஊழல்கள் பற்றிய விபரங்களைத் தெரிந்துகொண்டும் ஸ்கானியா நிறுவனம் பொலீஸுக்கு விசாரணைக்காக அறிவிக்கவில்லை.
ஸ்கானியா ஊழல் ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி அந்த நிறுவனத்தின் உயர் நிர்வாகி ஹென்ரிக் ஹென்ரிக்சனை நேரடியாகக் கேள்விகளால் துளைத்தெடுக்கிறது. ஸ்கானியா நிறுவனத்தின் கீழ் மட்டத்திலிருந்து பேருந்துகளை விற்பவர்கள் இந்திய அரசியலில் முடிவெடுக்கும் மட்டத்திலிருப்பவர்களுடனான தொடர்பில் லஞ்சங்கள் கொடுத்திருப்பதாகத் தங்கள் நிறுவனத்தின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக ஹென்ரிக்சன் ஒத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவின் ஏழு மாநிலங்களில் ஸ்கானியாவின் பேருந்துகள் விற்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு அமைச்சருக்குப் பணமாக 13,000, 20,000 டொலர்கள் பெட்டிக்குள் வைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும், தவிர்ந்த வெவ்வேறு சமயங்களில் லஞ்சங்கள் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியுமென்று ஹென்ரிக்சன் தெரிவித்திருக்கிறார்.
மாநிலங்களளவில் ஸ்கானியா பேருந்து விற்கப்பட்டது தவிர, இந்தியாவின் சுரங்க நிறுவனமொன்றுக்கு போலியான 100 ஸ்கானியா பாரவண்டிகளை விற்றிருப்பதாகவும் விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்தியாவுடனான வியாபாரங்களில் லஞ்ச, ஊழல்கள் மீண்டும் மீண்டும் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் ஸ்கானியா நிறுவனத்துக்குத் தெரியவந்தாலும் அதைச் செய்த நபர் குறிப்பாக யார் என்று தெரியாததால் தாம் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்று ஹென்ரிக்சன் தெரிவித்தார்.
பாரவண்டிகளின் விற்பனை இந்தியாவில் நன்றாகப் போகும் அதேசமயம், தொடர்ந்த லஞ்ச ஊழல்களின் காரணத்தால் ஸ்கானியா தமது பேருந்துகளை இந்தியாவில் விற்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்