ஆர்கன்ஸாஸ் மாநில அரசு வன்புணர்வு, இரத்த உறவுத் தொடர்புகளால் ஏற்படும் கருக்கலைப்புகளையும் நிறுத்தச் சட்டமியற்றியது.
கர்ப்பிணியாகிய பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் காரணமாக மட்டுமே இனிமேல் ஆர்கன்ஸாஸ் மாநிலத்தில் கருச்சிதைவு செய்தல் அனுமதிக்கப்படும்.
மாநிலத்தின் ரிபப்ளிகன் கட்சிக் கவர்னர் இந்தச் சட்டத்தைக் கொண்டுவரக் காரணம் “உச்ச நீதிமன்றம் 1973 இல் கருக்கலைப்பு ஒருவரின் தனி மனித உரிமை” என்ற தீர்ப்புக் கொடுத்திருப்பதை மீண்டும் பரிசீலிக்கவேண்டும் என்ற நோக்கு என்கிறார்.
டிரம்ப் அரசின் காலத்தில் ஆர்கன்ஸாஸ் கவர்னர் ஆஸா ஹச்சின்சன் போன்ற கிறிஸ்தவ பழமைவாதிகள் கை ஓங்கியிருக்கிறது. அவர்கள் பெரும் பணபலம், அதிகார பலத்துடன் அமெரிக்காவில் கருக்கலைப்பைத் தடுக்கவேண்டுமென்ற சட்டம் கொண்டுவரவேண்டுமென்ற எண்ணத்துடன் செயற்பட்டு வருகிறார்கள். டிரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் பல அமெரிக்க மாநிலங்கள் கருக்கலைப்பில் வெவ்வேறு அளவிலான கட்டுப்பாடுகள் கொண்டுவரும் சட்டங்களைப் பிறப்பித்திருக்கிறார்கள்.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தனது காலத்தில் நியமித்த பழமைவாத ஆதரவு நீதிபதிகளால் அப்படியான கோட்பாடுகளுடையவர்களின் கை ஓங்கியிருக்கிறது. 6 – 3 என்ற வேறுபாட்டில் பழமைவாத ஆதரவு நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
எனவே கருக்கலைப்பு மறுப்பை எதிர்த்து ஒருவர் உச்ச நீதிமன்றத்தை நாடுவாரானால் அதற்கான ஒரு நிலைப்பாட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் எடுக்கவேண்டிவரும். அதன் மூலம் 1973 ம் ஆண்டின் தீர்ப்பை மாற்றவேண்டுமென்பதே பழமைவாதிகளின் நோக்காகும்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்தாலும் மாநிலங்கள் கருக்கலைப்பை ஆதரிக்கும் சட்டங்களைக் கொண்டிருக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்