மொஸ்கோவின் கடைகளில் முகத்தைக் காட்டிக் கொள்வனவு செய்யலாம்.
ரஷ்யாவில், மொஸ்கோவின் 3,000 கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முக அடையாளத்தைக் காட்டினால் போதும். சமீபத்தில் அந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் மொஸ்கோ மெட்ரோ போக்குவரத்து வழிகளிலும் பாவிக்கப்படக்கூடியதாக இருக்கிறது.
ரஷ்யாவின் பெரிய பல்பொருள் அங்காடிச் சங்கிலியான X5 Retail Group கடைகள் முக அடையாளத்தால் (Face Pay) பொருட்களை வாங்கும் தொழில் நுட்பத்தை நாட்டிலிருக்கும் தங்கள் கடைகளிலெல்லாம் பொருத்தியிருக்கிறார்கள். அங்கிருக்கும் கமராவில் முகத்தைக் காண்பித்து அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பது தற்போதுள்ள கொவிட் 19 முகக்கவசமணிதலுக்கு இடையூறாக இருக்கிறது. அதனால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் ஒருவரின் முக அடையாளங்களை வைத்து மட்டும் இயங்குகிறது. இதற்காக ஒருவர் தன் விபரங்களைப் பதிந்துகொண்டு, ரஷ்யாவின் அரச வங்கியில் தங்கள் பணத்தை வைத்திருக்கவேண்டும். பதியப்படும் ஒருவரது விபரங்கள் நாட்டின் உள்துறை அமைச்சிடம் மட்டும் இருக்குமென்றும் அதனால் அவை வேறெவரிடமும் அகப்படாது என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், மனித உரிமை அமைப்புக்கள் ரஷ்ய அரசு நாட்டு மக்களில் எதிர்க்கட்சியாளர்களைக் கண்காணிப்பதற்கும், அவர்களைத் தேடிப் பிடிப்பதற்கும் உள்துறையிடமிருக்கும் விபரங்களைப் பாவிக்கும் அபாயம் இருக்கிறது என்று பயப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்