வனவிலங்குகள் – மனிதர்கள் இடையிலான போராட்டத்தில் யானை செய்த கொலைகளையெதிர்த்து புத்தளத்தில் போராட்டம்.
இன்று புத்தளம் – குருநாகல் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் நடத்தும் போராட்டத்துக்குக் காரணம் சமீபத்தில் அப்பிரதேசத்தில் இரண்டாவது தடவையாக யானை மனித உயிர்களைப் பறித்திருப்பதாகும். இம்முறை இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை யானை அடித்துக் கொன்றிருக்கிறது.
அப்பிராந்தியத்தை அடுத்திருக்கும் தப்போவா வனவிலங்குப் பாதுகாப்புப் பிராந்தியத்திலிருந்து வரும் யானைகள் அருகிலுள்ள கிராமங்களை நீண்ட காலமாகத் தாக்கி வருகின்றன. வன விலங்குகளுக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையேயான இயற்கை வளத்துக்கான போட்டி சுமார் 30 வருடங்களாகத் தொடர்வதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிறீலங்காவின் மாகாண அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன அந்தக் காட்டுப்பகுதியிலிருக்கும் யானைகளைத் துரத்திவிடுவதாகக் கொடுத்த உறுதியை நிறைவேற்றவில்லையென்று மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.
யானைகளைக் காக்க அரசு போட்டிருக்கும் சட்டங்களை மீறி புத்தளம், குருநாகல் பகுதி விவசாயிகள் மின்சாரத் தொடர்பு வலைகளை உண்டாக்கியும், சுட்டும் யானைகளைக் கொல்வதுமுண்டு. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 19 யானைகள் அப்படியாகக் கொல்லப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்