பிரிட்டனின் ஜனவரி மாதத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 % ஆல் குறைந்திருக்கிறது.
கடந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 2021 ஜனவரியில் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 விகிதத்தால் குறைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த மற்றைய உலக நாடுகளுக்கான பிரிட்டனின் ஏற்றுமதி இதே காலத்தில் 21 விகிதத்தால் குறைந்திருக்கிறது.
கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க பிரிட்டன் உட்பட்ட மற்றைய நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட கட்டுபாடுகள், நகர முடக்கங்களால் பொதுவாகவே ஏற்றுமதிகள் குறைந்திருந்தாலும், மற்றைய நாடுகளுக்கான ஏற்றுமதியைவிட இரண்டு மடங்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி குறைந்திருப்பதன் காரணம் பிரெக்ஸிட் ஆகும் என்று கருதப்படுகிறது.
பிரெக்ஸிட்டின் காரணமாக ஆரம்பக் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதிகள் மெதுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் ஒரேயடியாக இத்தனை பெரும் ஏற்றுமதி வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது பிரத்தியேகமாகக் கவனிக்கப்படுகிறது. உணவுப்பொருட்களுக்கான ஏற்றுமதியானது சுமார் 60 விகிதத்தால் குறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரெக்ஸிட்டின் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் பிரச்சினையாகக் கருதப்படுவது இரு பக்கத்தினிடையேயும் ஏற்பட்டிருக்கும் விண்ணப்பங்களும், அனுமதிகளுக்குமான அஞ்சல் போக்குவரத்துகளாகும். அவ்விடயங்களில் இரண்டு பகுதியாருக்குமிடையே நிலவும் விளக்கமின்மையும், அதிகாரங்களுக்கு இருக்கும் விபரமின்மையும் ஏற்றுமதி – இறக்குமதிகளில் தொல்லைகளைக் கொடுப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பிரிட்டிஷ் அரசு இதுபற்றிக் கிலேசமடைந்திருப்பினும் குறிப்பாக இப்பிரச்சினைகள் எதிர்பார்க்கப்பட்டவையே என்கிறது. பெருந்தொற்றுக்கள் குறைந்து நிலமை சீராகுவதும், பிரெக்ஸிட்டின் பின்னருக்கான ஒழுங்குகளை வர்த்தக நிறுவனங்கள் கற்றுக்கொள்வதும் நடந்தேறியபின் பிரிட்டனின் ஏற்றுமதிகள் மீண்டும் பழையபடி அதிகரிக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்