அஸ்ரா செனகாவின் தடுப்பூசி ஏன் குறிப்பிட்டவர்கள் இறக்கக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள் நோர்வே ஆராய்வாளர்கள்.
நோர்டிக் நாடுகளில் பின்லாந்து தவிர மற்றைய நாடுகள் சில நாட்களுக்கு முன்னர் அஸ்ரா செனகா தடுப்பு மருந்து போடுவதைத் தமது நாடுகளில் நிறுத்தின. காரணம் அதைப் போட்டுக்கொண்ட மிகச் சிலருக்கு ஏற்பட்ட சில மோசமான பக்கவிளைவுகளாகும். அதே போலவே பல ஐரோப்பிய நாடுகளும் அதன் பாவிப்பை நிறுத்தியிருந்தன.
நோர்வேயில் இறந்துபோன மூன்று 50 வயதுக்குக் குறைந்தவர்கள் தவிர மற்ற சிலருக்கு இரத்தப் போக்கும் உண்டாகியிருந்தது. தடுப்பு மருந்து போட்டுக்கொண்டதினால் ஏற்பட்ட ஹோர்மோன் மாற்றங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில், வயிற்றினுள் இரத்தக் கசிவை உண்டாக்கியதே இறப்பின் காரணம் என்கிறார்கள், அவற்றைப் பற்றிய ஆராய்ச்சியை நடாத்திய நோர்வீஜிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
“அவர்களுடைய உடலினுள் ஏற்பட்ட ஹோர்மோன் மாற்றங்களைத் தவிர வேறெவையும் இரத்தத்தின் அமைப்பில் குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தியதாக எங்களுக்குத் தெரியவில்லை,” என்கிறார் போல் ஆந்திரே ஹோல்மெ. “தடுப்பு மருந்தை நாம் எடுக்கும்போது உடலில் குறிப்பிட்ட சில எதிர்ப்புக் கிருமிகள் உண்டாகின்றன. அவை தமது பங்குக்கு வேறு சில மாற்றங்களை உடலினுள் ஏற்படுத்தி விடக்கூடும். அது சாதாரணமாக நடப்பதில்லை. அந்த மாற்றங்களின் விளைவால் இரத்தத்தின் தடிப்பு மாற்றமடைகிறது. அது இரத்தைப் போக்கை அல்லது இரத்தம் தடிப்பாகி (blood clot) உடலில் பரவாமல் தடுக்கிறது,” என்பது அவ்வாராய்ச்சியாளர்களின் விளக்கமாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலும், பிரிட்டனிலும் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்ட 18 மில்லியன் பேரில் சுமார் 15 பேருக்கே இந்த வித்தியாசமான பக்கவிளைவு ஏற்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகளை ஆராய்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் அமைப்பு EMA அஸ்ரா செனகா தடுப்பு மருந்தைப் பாவிப்பதற்கு மீண்டும் பிரேரிக்கிறது.
தற்போதைய நிலையில் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வது கொரோனாக் கிருமிகளால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவதையும், மற்றவர்களைத் தொற்றவைப்பதையும் விட ஆபத்துக் குறைந்ததே என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு.
சாள்ஸ் ஜெ. போமன்