அகதிகளை ஐரோப்பாவுக்குள் வராமல் தடுக்கத் துருக்கியுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடரவேண்டுமென்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
மனித உரிமை அமைப்புக்களாலும், சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களாலும் வெவ்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டது ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் ஐந்து வருடத்துக்கு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம். அவ்வொப்பந்தத்தின் சாரம் துருக்கிக்குப் பண உதவி செய்வதன் மூலம் அகதிகள் ஐரோப்பாவுக்குள் வரவிடாமல் செய்வது ஆகும்.
அகதிகளாக வருபவர்களைத் தடுப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் அவ்வொப்பந்தத்தை விமர்சித்தன. பணம் வாங்கிக்கொண்ட பின்னரும் துருக்கி அவ்வப்போது அகதிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய அனுமதித்து, அனுமதிப்பதாக மிரட்டி மேலும் பணம் கேட்டது போன்றவையால் சில நாடுகள் அவ்வொப்பந்தம் மீது அதிருப்தியுடன் இருக்கின்றன.
“துருக்கியுடனான ஒப்பந்தம் பலவீனங்களைக் கொண்டிருந்தாலும், பிரயோசனமான விளைவுகளைத் தந்திருக்கின்றன. மத்தியதரைக் கடலுக்குள் இறந்துபோகிறவர்கள் குறைந்திருக்கிறார்கள். தஞ்சம் தேடி வருகிறவர்களுக்குத் துருக்கியில் முன்னரைவிட அதிக பாதுகாப்பும், உதவிகளும் கிடைக்கின்றன,” என்று ஒப்பந்தத்தைச் சிலாகிக்கிறார் ஐ.ஒன்றியத்தின் வெளிவிவகார, பாதுகாப்பு உயரதிகாரி ஜோசப் பொரல்.
ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை துருக்கிக்கு நான்கு பில்லியன் எவ்ரோக்களைக் கொடுத்திருக்கிறது. மேலும் இரண்டு பில்லியன் தருவதாக உறுதியளித்திருக்கிறது. அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது பற்றிய பேச்சுவார்த்தைகள் இரண்டு பக்கத்தாருக்கும் இடையே நடந்து முடிந்திருக்கிறது. “ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலிலிருக்கும்,” என்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
2015 இல் ஐரோப்பிய ஒன்றியம் மிகப்பெரும் அகதிகள் அலையை எதிர்கொண்டபோது கிரீஸுக்குத் துருக்கி மூலமாக வந்தவர்கள் சுமார் 850,000 பேராகும். அது 2017 இல் சுமார் 30,000 ஆகக் குறைந்திருக்கிறது. அது ஒரு மிகப்பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.
மனித உரிமை அமைப்புக்களோ ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது தமது விமர்சனத்தைத் தொடர்கிறார்கள். தனது நாட்டில் ஒரு ஒழுங்கான அகதிகள் வரவேற்று, கையாளல் திட்டமே இல்லாத துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் இப்படியான ஒப்பந்தமொன்றைச் செய்திருப்பதை அவர்கள் சாடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்