கார்தினால்களுடைய ஊதியங்களைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார் பாப்பரசர் பிரான்சீஸ்.
கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தாமலிருக்கவும் வேண்டி பாப்பரசர் தனது கார்தினால்களின் ஊதியங்களைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறார்.
முக்கியமாக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் புனிய பேதுரு ஆலயம், வத்திக்கான் அருங்காட்சியகம் ஆகியவை கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பித்தது முதல் மூடியிருக்கின்றன. இவ்வாரத்தில் திறக்கப்படவிருந்த அருங்காட்சியகம் இத்தாலியின் புதிய கட்டுப்பாடுகளுக்கிணங்கித் தொடர்ந்தும் மூடப்படுகின்றன. அவைகள் வருடாவருடம் ஆறு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்கொள்பவையாகும்.
தனது பொருளாதார இழப்புக்களைச் சமாளிக்க வத்திக்கான் தனது சேமிப்பிலிருந்து கடந்த வருடம் 40 மில்லியன், இவ்வருடம் 40 மில்லியன் எவ்ரோக்களை எடுத்துச் செலவழிக்கிறது.
வத்திக்கானில் அல்லது ரோமின் மற்றைய பகுதிகளில் வாழும் கார்தினால்கள் மாதாமாதம் 4,000 – 5,000 ஊதியம் பெறுகிறவர்கள். தவிர, மிகப்பெரும் வீடுகளில் சகல வசதிகளுடன் வாழும் அவர்கள் பெரும்பாலும் வாடகைகளிலும் சலுகை பெறுகிறார்கள். கொடுந்தொற்றுக் காலத்தில் குறைந்த ஊதியம் பெறுபவர்களை வேலையிலிருந்து நிறுத்தி அவர்களை மேலும் தொல்லைப்படுத்தாமலிருக்கவே இந்த முடிவைப் பாப்பரசர் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வத்திக்கான் திணைக்களங்களில், அதிகாரங்களில் வேலை செய்யும் குருமார், கன்யாஸ்திரிகளும் ரோமின் மற்றைய பகுதிகளில் தேவாலயங்களிலும், மடங்களிலும் வாழ்பவர்களே. அவர்களுக்கும் பொதுவாக நல்ல பொருளாதாரப் பாதுகாப்பு இருக்கிறது.
கடைநிலை ஊழியர்கள், தீயணைப்புப் படையினர், துப்பரவுப் பணியாளர்கள், கலைப்பொருட்களைப் பராமரிப்பவர்கள் போன்றவர்களுடைய ஊதியங்கள் அனேகமாகக் குறைக்கப்படாது. அவர்களை வேலையிலிருந்து நிறுத்தவும் பாப்பரசர் முடிவெடுக்கமாட்டார் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்