மரண தண்டனையை நிறுத்தும் முதலாவது தென் மாநிலமாகிறது அமெரிக்காவின் வெர்ஜீனியா.
டெமொகிரடிக் கட்சியினர் தமது தேர்தல் வாக்குறுதிக்கு ஒவ்வாக நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக வெர்ஜினியா மாநிலம் அம்முடிவை எடுத்திருக்கிறது. மாநில ஆளுனர் ரால்ப் நோத்தம் அந்த முடிவை கிரீன்வில் மரண தண்டனை மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாகக் கையெழுத்திட்டார்.
“நாட்டில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுகிறவர்கள் தொகையில் வெள்ளையருக்கும் கறுப்பருக்கும் இருக்கும் இடைவெளி மிகப்பெரியது. எந்த ஒரு நீதிமன்ற முறையிலும் 100 % சரியான தீர்ப்பு வழங்க முடிவதில்லை. 1973 க்குப் பின்பு இதுவரை அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 170 பேர் மீதான தீர்ப்புக்கள் தவறாகியிருக்கின்றன,” என்று ஆளுனர் தனது உரையின் போது குறிப்பிட்டார்.
1600 ம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட வெர்ஜினியா மாநிலம் 1,400 பேரை மரண தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றல் நிறுத்தப்பட்டு 1976 இல் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பின்னர் டெக்ஸாஸ் மாநிலத்துக்கு அடுத்ததாக அதிகம் பேரை மரண தண்டனைக்கு உண்டாக்கிய மாநிலம் வெர்ஜினியாவாகும். இங்கே மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட 377 பேரில் 296 பேர் கறுப்பினத்தினராகும்.
இதுவரை 23 அமெரிக்க மாநிலங்கள் மரண தண்டனையை நிறுத்தியிருக்கின்றன. வெர்ஜினியாவில் மரண தண்டனைக்காகக் காத்திருந்த இரண்டு கைதிகளுடைய தண்டனைகளும் ஆயுள் தண்டனைகளாக மாற்றப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்