ஆசியா – ஐரோப்பிய நீர்ப்போக்குவரத்து மூடப்பட்டிருப்பதால் மணித்தியாலம் 400 மில்லியன் டொலர்கள் இழப்பு.
மூன்றாவது நாளாக நீர்ப்பரப்பின் கரையில் முட்டியதால் சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டதுமன்றி, உலகின் அதிமுக்கிய போக்குவரத்து வழியை அடைத்தும் விட்ட சரக்குக் கப்பலால் சர்வதேச வர்த்தகத்துக்குப் பல பில்லியன் டொலர்கள் இழப்பு உண்டாகுமென்று கணிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதிரிப் பாகங்கள், ஆசியாவிலிருந்து வரும் உணவுப்பொருட்கள், தனியார் வாங்கிக்கொள்ளும் வீட்டுப் பொருட்கள் போன்ற பலவகையான பொருளாதார இயக்கங்களுக்கு ஆசிய – ஐரோப்பிய கடல்வழி திறந்திருப்பது அவசியமாகும். தகுந்த நேரத்தில் தேவையான பொருட்கள் கிடைக்காதபட்சத்தில் பல தொழிற்சாலைகளில் தயாரிப்புக்களைத் தொடர முடியாது போகும்.
ஏற்கனவே பல நூறு கப்பல்கள் அவ்வழியில் போவதற்காக தமது பொருட்களுடன் காத்திருக்கின்றன. அவைகளின் செலவுகள், அவைகளிலிருக்கும் கொள்கலங்களுக்கான வாடகை, அவை சேரவேண்டிய தருணத்தில் வராததால் துறைமுகங்களுக்குச் செலுத்தவேண்டிய கட்டணம், இவையெல்லாவற்றுக்குமாக பற்பல காப்புறுதி நிறுவனங்கள் கொடுக்கவேண்டிய நஷ்ட ஈடுகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு மணிக்குச் சுமார் 400 மில்லியன் டொலர்கள் நட்டமாகி வருவதாக புளும்பெர்க் நிறுவனம் கணித்திருக்கிறது.
“கப்பலை நீர்ப்பரப்புக்கு மிதப்பு நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியில் பல மீட்புக் கப்பல்கள் உதவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், அப்பணிகள் மிகப்பெரும் கடினமானவையாக இருக்கின்றன,” என்று மாட்டிக்கொண்ட கப்பலின் நிறுவனம் அறிக்கை விட்டிருக்கிறது.
இந்தக் கப்பலில் வேலை செய்யும் 25 பேருமே இந்தியர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்