பிரிட்டிஷ் பாடசாலையொன்றில் சார்லி எப்டோவில் வெளியாகிய முஹம்மது படம் காட்டியதற்கு எதிர்ப்பு.
பிரெஞ்சு கேலிச்சித்திரச் சஞ்சிகையான சார்லி எப்டோவில் வெளியிடப்பட்ட படங்களிலொன்றை வகுப்பில் படிப்பிப்பதற்காகக் காட்டியதால் பிரிட்டனின் வெஸ்ட் யோக்சயர் நகரில் குறிப்பிட்ட பாடசாலைக்கு வெளியே ஒரு கும்பல் எதிர்ப்பைக் காட்டியது. இந்தக் கேலிச் சித்திரங்களை எதிர்த்துக் குறிப்பிட்ட பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டதும், பின்னர் அதே படமொன்றைத் தனது வகுப்பில் காட்டியதாக ஒரு பிரெஞ்சு ஆசிரியர் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம்கள் செறிவாக வாழும் பட்லி கிரம்மர் பாடசாலையில் நடந்த சம்பவத்திலும் அதே போன்ற படங்களையே இஸ்லாம் தூதர் முஹம்மது என்று காட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அதை எதிர்த்தே அப்பகுதி மக்கள் பாடசாலையின் முன்பு கூடி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.
“மாணவர்களுக்கு வெவ்வேறு மதங்களையும், அவைகளின் கோட்பாடுகளையும் காட்டுவது அவசியம். அவை, மரியாதையான முறையில் கற்பிக்கப்படவேண்டும்,” என்று பாடசாலை அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், குறிப்பிட்ட ஆசிரியரைத் தற்காலிகமாகக் கடமைகளிலிருந்து விலக்கியிருக்கிறது. அந்த ஆசிரியர் நிரந்தரமாக நீக்கப்படவேண்டுமென்று கோருகிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
பிரிட்டனில் கல்வியையும், மதங்களையும் ஒன்றாகக் கலந்தடிக்காமலிருக்கும் நடவடிக்கைகளுக்காகச் செயற்பட்டு வரும் அமைப்பான National Secular Society இந்த எதிர்ப்பை “இஸ்லாமிய சமய விடயங்களை மற்றவர்கள் விமர்சிக்கலாகாது என்பதை பிரிட்டனிலும் திணிக்க முயல்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசு இதுபற்றிய கருத்துக்களெதையும் இன்னும் தெரிவிக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்