அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு ஒரு புதிய பொதுச் செயலாளர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பிரான்ஸைச் சேர்ந்த அக்னேஸ் கலமார்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். உலகின் 70 நாடுகளில், பத்து மில்லியன் அங்கத்தினர்களையும், நன்கொடை வழங்குபவர்களையும் கொண்டிருக்கும் அமைப்பு அம்னெஸ்டி. இதன் தற்போதைய தலைவர் ஜூலி வெர்ஹார் பதவிக்காலம் முடியும்போது அக்னேஸ் உடனடியாக உத்தியோகபூர்வமாகப் பதவியில் சேருவார்.
56 வயதான அக்னேஸ் 30 நாடுகளில் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆராய்வுகளை நடாத்தியிருக்கிறார். துருக்கியிலிருக்கும் சவூதிய தூதுவராலயத்தில் சவூதிய இளவரசனின் திட்டப்படி கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோஜ்ஜிக்கு என்ன நடந்தது என்று ஐ.நா-வுக்காக இவர் கடைசியாக ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அந்த அறிக்கைக்காக சவூதிய அரசகுமாரனுக்கு நெருங்கியவர்கள் தனக்குக் கொலை மிரட்டல் அனுப்பியிருப்பதாக இவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஈரானிய இராணுவத் தளபதி காஸம் சுலைமானி ஈராக்கிய விமான நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தபோது அவரை அமெரிக்கா தனது காற்றாடி விமானங்கள் மூலம் குறிவைத்துத் தாக்கிக் கொன்றது பற்றிய ஆராய்வையும் செய்து வெளியிட்டவர் அக்னேஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்