அமெரிக்க பாராளுமன்ற வன்முறைகள் சம்பந்தமான பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலாவது பச்சைக்கொடி.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையடுத்து அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பலர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். ஜனவரி ஆறாம் திகதியன்று அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நடந்த அந்தத் தாக்குதல் தொடர்ந்தும் அரசியல் நில நடுக்கங்களை உண்டாக்கி வருகிறது. அதுபற்றிய ஒரு பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்கான பச்சைக்கொடி பாராளுமன்றத்தின் கீழ்ச்சபையில் கிடைத்திருக்கிறது.
பாராளுமன்ற வன்முறைகளுக்கான வித்தினை இட்டவர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் என்ற பரவலாகக் குறிப்பிடப்பட்டு வந்ததால் அவரது கட்சியினரிடையே அது பற்றிய விசாரணைக்கு எதிர்ப்பு இருந்து வந்தது. ஆனாலும், புதனன்று நடந்த வாக்களிப்பில் 252 – 175 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் அவ்விசாரணைக்கான அனுமதி அங்கத்தவர்களால் கொடுக்கப்பட்டது. ரிபப்ளிகன் கட்சியைச் சேர்ந்த 35 அங்கத்தவர்கள் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துத் தொடர்ந்தும் கட்சிக்குள்ளிருக்கும் பிரிவினையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
விசாரணைக் குழுவானது கட்சி சார்பற்றதாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது. இதுபற்றித் தனக்கிருக்கும் வெறுப்பை டிரம்ப் தனது இணையத் தளம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். பாரபட்சமற்ற விசாரணைக் குழு என்பது டெமொகிரடிக் கட்சியினர் பொறியில் வைக்கும் ஒரு இனிப்புப்பண்டமே என்று அவர் குறிப்பிட்டார். இதுபற்றிய மீண்டுமொரு வாக்கெடுப்பு செனட் சபையில் நடக்கும். அங்கே பத்து ரிபப்ளிகன் கட்சி அங்கத்துவர்கள் ஆதரவாக வாக்களித்தாலே அது நிறைவேற்றப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்