ஐந்து நட்சத்திர உல்லாசச் சிறையிலிருந்து மூன்று வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார் பக்ர் பின் லாடன்.

ஒரு காலத்தில் சவூதி அரேபியாவின் அரச குடும்பத்துக்கு மிக வேண்டியவர்களாகவும், நாட்டின் பொருளாதார, வர்த்தக சமூகத்தின் அதியுயர் வட்டத்திலும் இருந்தவர்கள் பின் லாடன் குடும்பத்தினர். அரச குடும்பம் பகைத்துக் கொள்ள விரும்பாத அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சி ஒஸாமா பின் லாடன் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பரப்ப அல் கைதா இயக்கத்தை ஆரம்பித்து அமெரிக்காவுடன் மோதிக்கொள்ளத் தொடங்கியவுடன் ஆரம்பித்தது.

ஆனாலும் பின் லாடன் குடும்பத்தின் நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய, முக்கிய கட்டுமான நிறுவனமாக இருந்தது. பின் லாடன் குடும்பத்தின் மூன்று சகோதரர்களான பக்ர், சாட், சாலே ஆகியவர்கள் அந்த நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்கள். ஒஸாமா பின் லாடனின் ஒன்று விட்ட சகோதர்களான அந்த மூவரும் முன்னாள் சவூதிய பட்டத்து இளவரசன் முஹம்மது பின் நாயவுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அதனால், நாட்டின் மிக முக்கிய கட்டடங்களைக் கட்டும் பொறுப்பை எடுத்து கணக்கின்றிச் சம்பாதித்தார்கள்.

தற்போதைய அரசன் சல்மான் பின் அப்துல் அஸீஸ் பதவிக்கு வந்ததும் படிப்படியாக முஹம்மது பின் நாயவை ஒதுக்கிவிட்டுத் தனது மகன் முஹம்மது பின் சல்மானை இளவரசனாக்கினார். நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்த முஹம்மது பின் சல்மான் 2017 நவம்பரில் திடீரென்று ஒரு நாள் சவூதி அரேபியாவின் அதியுயர்ந்த பணக்காரர்கள் சிலரை நாட்டின் உல்லாச ஹோட்டலான ரிட்ஸ் கார்ல்ட்டனுக்கு வரவழைத்து அவர்களை அங்கேயே சிறை வைத்தார்.

ஐந்து நட்சத்திர ஹோட்டலான அதனுள் வைக்கப்பட்டவர்களில் தற்போதைய அரச குடும்பத்தினரைக் கவிழ்க்கத் திட்டமிட்ட சிலர் உறவினர்கள் தவிர நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் சிலரும் இருந்தனர். சகல வசதிகளுடனும் அங்கே வாழவைக்கப்பட்ட அவர்கள் வெளியே போக முடியாமல், எவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படாமல் அங்கேயே லஞ்ச ஊழல்களுக்காக விசாரிக்கப்பட்டதாக அரச செய்திகள் தெரிவித்தன.

அந்த உல்லாச ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்களில் பின் லாடன் சகோதரர்கள் மூவரும் அடங்குவர். உல்லாச ஹோட்டல் சிறையிலிருந்த பெரும்பாலானோர் மிகப்பெருந்தொகைகளையும், சொத்துக்களையும் அரசுக்குக் கொடுத்தபின்னர் வெளியே விடப்பட்டனர். அவர்கள் எவரும் சவூதிக்கு வெளியே போகவோ, தமக்கு நடந்ததை வெளிப்படுத்தவோ அனுமதிக்கப்படவில்லை. 

பின் லாடன் சகோதர்களில் சாலே, சாட் ஆகிய இருவரும் முன்னரே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அவர்கள் சிறையிலிருந்த சமயத்தில் அவர்களுடைய நிறுவனத்தில் ஏற்பட்ட பலவீனமான நிலைமையைப் பயன்படுத்தி அதன் 36 % ஐ இளவரசன் முஹம்மது பின் சல்மான் கையகப்படுத்திவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

மூன்று வருடத்துக்குப் பின்னர் 75 வயதான பக்ர் பின் லாடன் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஜெட்டாவிலிருக்கும் குடும்பத்தினருடன் இணைந்துகொண்ட அவர் ஊடகங்களுடன் தொடர்புகொள்ளவோ, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவோ முடியாது. பக்ர் 2019 இல் ஒரு தடவை நெருங்கிய உறவினரின் மரணச் சடங்கில் கலந்துகொள்ள மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *