ஐரோப்பா ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்தது போன்ற பாரம்பரியங்களைக் காத்துப் பேணும் மாறா மூறேஷ் – ருமேனியா.
ருமேனியாவின் ஆறு மாகாணங்களில் ஒன்று மாரா மூரேஷ் என்று குறிப்பிடப்படும் மாறா மூறேஷ் சுமார் 530,000 மக்களைக் கொண்ட உக்ரேனை எல்லையாகக் கொண்டது. இது ருமேனியாவின் வடமேற்கிலிருக்கிறது.
சாத்து மாரே என்ற இதையடுத்துள்ள நகரில் விமான நிலையம் இருக்கிறது. ருமேனியாவின் தலைநகரான புகுரெஷ்ட்டுடன் ரயில் மட்டும் வீதித் தொடர்புகள் இருக்கின்றன. இந்தப் பகுதியின் புவியியல் மலைக்குன்றுகளாலும் அதனையடுத்துள்ள காடுகளாலும் ஆனவை.
மாறா மூறேஷ் பிராந்தியத்தின் அடையாளங்கள் ருமேனியாவில் மிகவும் தனித்துவமானவை எனலாம். ஆரம்பகாலத்தில் ருமேனியாவில் குடியேறிய டாச்சியர்கள் என்றழைக்கப்படும் மூதாதையர்களுடைய வாழ்க்கை முறை பெரிதும் பேணப்படும் பகுதி இது எனலாம்.
மரங்களிலான வீடுகள், ஓர்த்தடொக்ஸ் தேவாலயங்கள் போன்றவை மிகவும் அழகான கைவேலைப்பாட்டுடன் இங்கே காணப்படுகின்றன. வீடுகளின் கதவுகள், சாளரங்கள் ஆகியவும் தனித்துவமான கைவேலைப்பாட்டால் உருவானவை.
விஸு டி சூஸ் என்ற நகரிலிருக்கும் புகைவண்டிப் பயணம் இங்கே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. சுவிஸ் நாட்டினரால் நடாத்தப்படும், பாதுகாத்துப் பேணப்படும் பழங்கால ரயில் இயந்திரங்களையும், பெட்டிகளையும் இங்கே காணலாம். 1800 – 1900 களில் காடுகளில் வேலைசெய்யப் பயன்படுத்திய அந்தப் புகைவண்டிகளில் பயணம் செய்து மகிழலாம்.
மகிழ்ச்சியான மயானம் என்றழைக்கப்படும் இறந்தவர்களைப் புதைக்கும் இடமும் பிரபலமாக இருக்கிறது. சபந்தா என்ற நகரிலிருக்கும் அந்த கிறீஸ்தவ மயானத்தில் ஒவ்வொரு கல்லறையிலும் அழகான கைவேலைப்பாடுகளால் செய்யப்பட்ட நினைவுச்சின்னங்களை அழகிய கவிதை வரிகளுடன் காணலாம். ஸ்டான் இயோன் பத்ராஸ் என்ற சிற்பியால் 1935 இல் அவ்வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இப்போதும் தொடர்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்