ஜூன் 21 ம் திகதி பிரிட்டனின் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் எவ்வித மாற்றமுமில்லை என்கிறார் போரிஸ் ஜோன்சன்.
நாட்டில் படிப்படியாகக் கொரோனாக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் பிரிட்டனில் ஜூன் 21 ம் திகதியுடன் பெரும்பாலும் சகஜமான நடவடிக்கைகளுக்குத் திரும்பிவிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமீபத்தில் அங்கே காலூன்றி வரும் டெல்டா, கப்பா திரிபுகளின் மூலம் மீண்டும் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன. அது நாட்டின் மருத்துவத் துறையினரைச் சஞ்சலத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அதனால், மருத்துவ விஞ்ஞானிகளில் ஒரு சாரார் பிரிட்டன் கொரோனாக் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவற்றை அகற்றுவதற்கான நேரம் இதுவல்ல, பின்போடுவதே புத்திசாலித்தனம் என்று குரலெழுப்பி வருகிறார்கள். அவர்களில் ஒரு சாரார் அதிகரித்து வரும் தொற்றுக்கள் பிரிட்டனில் ஏற்படப்போகும் மூன்றாவது தொற்று அலையின் ஆரம்பமே என்றும் எச்சரிக்கிறார்கள். அதே சமயம் இன்னொரு சாரார் சமூகத்தைத் திறப்பதைத் தள்ளிப்போடலாகாது. தொடர்ந்தும் கட்டுப்பாடுகளைக் கைக்கொள்வது நன்மைகளை விட அதிகமாகத் தீமைகளையே தரும் என்கிறார்கள்.
வர்த்தகத் துறையினரோ ஜூன் 21 ம் திகதியை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் தவறணைகளினால் பலர் வேலைவாய்ப்பை இழந்தும், பலர் வியாபாரத்தில் நஷ்டங்களைத் தாங்கியும் வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை சமூகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதே தம்மைக் காப்பாற்றும் என்பதாகும்.
பிரதம போரிஸ் ஜோன்சன் சமீபத்தில் பேசும்போது “ஜூன் 21 ம் திகதி அறிவிக்கப்பட்ட தளர்த்தல்களைத் தாமதிக்கக்கூடிய அளவில் தொற்றுக்களின் நிலை மோசமாவதை நான் காணவில்லை. தொடர்ந்தும் நிலைமையைக் கவனித்து வருகிறோம்,” என்று குறிப்பிட்டார். தள்ளிப்போடக்கூடிய விதமாக நிலைமை மாறலாம் என்றும் எச்சரித்தார். ஜூன் 14 ம் திகதியன்று அதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்