சவூதியர்களின் புகார்களைச் செவிமடுத்து நாட்டின் பள்ளிவாசலின் ஒலிபெருக்கிகளின் சத்தத்தைக் குறைக்க அமைச்சர் உத்தரவு.

நாட்டிலிருக்கும் சகல பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சத்தமும் அதன் மூன்றிலொரு பங்கால் குறைக்கப்படவேண்டும் என்று சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கலாச்சார அமைச்சர் அப்துல் லத்தீப் அல் – ஷேக் உத்தரவிட்டிருக்கிறார். அதற்குக் காரணம் மக்களின் புகார்களே என்று அவர் விளக்கம் தெரிவித்திருக்கிறார். 

பள்ளிவாசல்களில் பூட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளின் அளவுக்கதிகமான சத்தத்தால் சிறார்களும், வயதானவர்களும் மிகவும் பாதிக்கப்படுவதால் அவைகளின் சத்தம் குறைக்கப்படவேண்டுமென்ற உத்தரவைச் சவூதிய அரசு பிறப்பித்திருக்கிறது.  

“அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் இமாம் அதற்காக அழைக்க முதலே பள்ளிவாசலில் அந்த நேரத்தில் சமூகமளிக்க வேண்டும். ஒலிபெருக்கிகளில் பிரார்த்தனை செய்ய அழைப்பது பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டதல்ல,” என்று தனது உத்தரவுக்கான காரணத்தைத் தொலைக்காட்சியொன்றில் அமைச்சர் விளக்கியிருக்கிறார்.

அமைச்சரின் உத்தரவும், சவூதி அரேபிய இளவரசனின் “சவூதி அரேபியாவை ஒரு நவீன இஸ்லாமிய நாடாக்கும்,” திட்டத்தின் பகுதியே என்று கணிக்கப்படுகிறது. நாட்டில் சமூகக் கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்களில் மென்மையான நிலைமையைக் கடந்த சில வருடங்களாகவே இளவரசர் முஹம்மது பின் சல்மான் அறிமுகப்படுத்தி வருகிறார். 

இஸ்லாமிய கலாச்சார அமைச்சரின் பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள் பற்றிய உத்தரவும் நாட்டின் பழமைவாதிகள், வயதானவர்களிடையே ஓரளவு அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. ஆனால், இளவயதினரில் பெரும்பான்மையானோர் சவூதி அரேபியா ஒரு நவீன சமூகமாகப்  பல கலாச்சாரங்களையும் உள்வாங்கும் சமூகமாக மாறவேண்டுமென்று எதிர்பார்ப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *