1973 க்குப் பின்னர் இவ்வருடத்தின் உலகின் பொருளாதார வளர்ச்சி தான் மிகவும் அதிகமானதாக இருக்கும்.

உலக நாடுகளின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கான கூட்டுறவு ஒன்றியமான OECD இன் கணிப்புப்படி இவ்வருடம் உலகப் பொருளாதாரம் 5.8 % ஆல் அதிகரிக்கும். 1973 இன் பின்னர் உலகப் பொருளாரத்தின் வளர்ச்சி இத்தனை அதிகமாக இருந்ததில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளெல்லாவற்றிலும் ஏற்படாது. சில நாடுகளின் சக்கரங்கள் தேயுமளவிற்குப் பொருளாதார இயந்திரம் ஓடும் அதேசமயம் பல நாடுகளின் பொருளாதாரச் சக்கரம் பின்னோக்கியே உருளப்போகிறது. 

ஏற்கனவே சில நாடுகளில் கடந்த மாதங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. தொற்றுநோய்ப்பரவல்கள் அடங்க ஆரம்பித்தவுடன் சீனாவின் பொருளாதாரம் முன்னதைவிட, சில வருடங்களுக்கு முன்னர் எதிர்பார்த்ததை விடச் சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்திருக்கிறது. இஸ்ராயேல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலவற்றில் ஓரிரு மாதங்களாகவே தொருளாதார இயந்திரம் வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. 

இவ்வருடமும், வரவிருக்கும் வருடங்களிலும் எங்கெங்கே பொருளாதார வளர்ச்சி பலமாக ஏற்படும் என்பதை நிர்ணயிக்கப்போவது எந்தெந்த நாட்டில் மக்களின் தேவைக்கேற்ற அளவுக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன என்பதாகும் என்கிறது OECD. அத்துடன் நாட்டின் டிஜிடல் வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். 

பொருளாதார அமைப்புக்கள் பலமாக இருக்கும் வளர்ந்த நாடுகள் தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துவிட்ட பின்னரும் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள டிஜிடல் முறையில் தம்மைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் தொடர்ந்தும் தமது பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்கும். 

பின் தங்கிய நாடுகள் பல சமீப காலத்தில் தமக்குத் தேவையான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் அவர்களின் பொருளாதாரம் தேக்கநிலையிலேயே இருக்கும் அபாயமுண்டு. அப்படியான நாடுகளின் பிராந்தியங்களில் தொற்றுக்கள் அவ்வப்போது ஏற்படுமானால் அதனால் நாடுகள் முழுவதுமே பாதிக்கப்படும். எனவே சில நாடுகள் கொரோனாத் தொற்றுக்களுக்கு முன்னரிருந்த நிலையை அடையவே பத்து வருடங்களுக்கு மேலாகலாம் என்று கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *