பிரான்சில் வீட்டில் இருந்து தொழில் செய்தோர் புதன்கிழமை முதல் பணியிடத்துக்கு.
இரவு ஊரடங்கு இனி 11 மணி முதல் உணவக உள்ளிருக்கைகள் திறப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றாக நீக்குகின்ற கால அட்டவணையின்மூன்றாவது முக்கிய கட்டம் புதன்கிழமை(ஜூன் 9)தொடங்கு கிறது.
” télétravail “என்கின்ற தொலைவில்-வீடுகளில் – இருந்தவாறு அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் விதிகளில்மாற்றங்கள் வருகின்றன. ஆனால் வீடுகளில் இருந்து பணியாற்றுகின்ற முறை தொடர்ந்து செப்ரெம்பர் வரை நடைமுறையில் இருக்கும். அதுவரை வாரத்தில் எத்தனை நாட்கள் அலுவலகங் களில் சென்று பணிபுரிவது என்பதை ஊழியர்களும் கம்பனிகளது தொழில் வழங்குநர்களும் பேசி முடிவு செய்துகொள்ளவேண்டும். தொற்று நோய்க் கட்டுப்பாட்டு விதிகள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதால் வாரத்தில் ஐந்து நாள்களும் பணிக்கு வருமாறு எவரையும் வற்புறுத்த முடியாது என்று தெரிவிக்கப் படுகிறது. எனினும் வாரத்தில் ஒரு நாளாவது அலுவலகப் பணியிடத்துக்குத் திரும்புவது கட்டாயம் ஆகும்.
சுமார் ஓராண்டுக்கும் அதிக காலம் வீடுகளில் இருந்தவாறு அலுவலக வேலைளைக் கவனித்து அதற்குப் பழக்கப்பட்டுப்போனவர்கள் பலரும் மீண்டும் பணியிடம் திரும்பி வேலைகளை அங்கிருந்து செய்வதற்கு ஆர்வமாக இல்லை என்பது கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை நீண்ட காலமாக மூடி முடக்கப்பட்டிருந்த பல இடங்கள் புதன்கிழமை தொடக்கம் திறக்கப்படவுள்ளன. தற்போது வெளி இருக்கைகளில் மட்டும் இயங்கி வருகின்ற உணவகங்களும் அருந்தகங்களும் உள் இருக்கைகளையும் சேர்த்து முழு அளவில் செயற்பட வழி திறக்கிறது.ஆனாலும் உள்ளிருக்கைகளில் அரைவாசிப் பங்கில் மட்டுமே(50 வீதம்) மேசைக்கு ஆறுபேர் என்ற கணக்கில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கலாம்.
பணியிடங்களிலும் ஹொட்டேல்களிலும்உள்ளே மதிய உணவு அருந்துகின்ற கன்ரீன் மண்டபங்களும் திறக்கப்படுகின்றன. இரவு ஒன்பது மணிக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஊரடங்கு புதன்கிழமை இரவு தொடக்கம் 11மணிமுதல் ஆரம்பமாகும். ஊரடங்கு நேரம் மேலும் தளர்த்தப்படுவதால் உணவகங்கள் இனிமேல் தங்கள் இரவு சேவைகளை நீண்ட நேரம் வழங்க முடியும். மூன்றாம் கட்டத் தளர்வுகளில் மற்றொன்று உள்ளரங்க விளையாட்டுகளுக்கும் நீச்சல் தடாகங்களுக்குமான அனுமதி ஆகும். (les salles de sport, les piscines ou les gymnases).
அரசின் கால அட்டவணை திட்டமிட்டவாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியுடன் முற்றாக நீக்கப்படவேண்டும். இரவு ஊரடங்கும் அன்றைய தினத்துடன்முடிவுக்கு வரும்.
குமாரதாஸன். பாரிஸ்.