“சென் நதி ஒலிம்பிக்”மாதிரிக் காட்சிகள் வெளியாகின!

வரலாற்றில் முதல் தடவையாக திறந்த வெளியில் ஆரம்ப விழா.

உலகப் பெரு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் இதுவரை மூடிய உள்ளரங்குகளிலேயே நடைபெற்றுவந்திருக்கின்றன. பாரிஸில் 2024 இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இந்த மரபு அடியோடு மாறுகிறது. ஆரம்ப நிகழ்வையும் நிறைவு வைபவத்தையும் நகரின் மையப்பகுதியில் திறந்த வெளியில் நடத்துவது என்ற பிரான்ஸின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதிபர் மக்ரோனுடைய அந்த விருப்பத்தைச் செயற்படுத்துகின்ற முடிவைப்பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஒழுங்குபடுத்துகின்ற குழுவின் பணிப்பாளர்சபை(The Board of Directors of the Organizing Committee for the Paris Olympic Games in 2024) இந்த வாரம் வெளியிட்டுள்ளது.சர்வதேச ஒலிம்பிக் குழுவும் அதற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாரிஸ் நகரின் மையத்தில் ஈபிள் கோபுரப் பகுதியை உள்ளடக்கிச் செல்லுகின்ற சென் நதியின் நீளத்தில் சுமார்ஆறு கிலோ மீற்றர்கள் பகுதியில் நதி மீதும் அதன் அழகிய கரையோரங்களிலும் பல்லாயிரக்கணக்கான உலக வீரர்கள் கலந்து கொள்ளும் தொடக்க நிகழ்வுநடைபெறவிருக்கிறது.

திறந்த-பரந்த-அப்பிரதேசத்தில் போட்டி யின் ஆரம்ப நிகழ்வைக் கண்கொள்ளாக் காட்சியாக எப்படி நடத்துவது என்பதைமாதிரிக் காட்சிகளாகத் தயாரித்துள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் குழு. அவற்றையே படங்களில் காண்கிறீர்கள்.

சென் நதியில் le pont d’Austerlitz பாலத்துக்கும் le pont d’Iéna பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இரு நூறு நாடுகளது 10 ஆயிரத்து 500 வீரர்களை உள்ளடக்கிய அணிகள் சுமார் 160 படகுகளில் நீரில் மிதந்து வர மேலே வானம் முழுவதும் வண்ண மயமாக்கப்பட்ட பின்னணியில் ஒலிம்பிக் விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறுதிநாள் நிறைவு வைபவம் ட்ரோகேடெரோ (Esplanade du Trocadéro) பகுதியில் நடத்தப்படும்.

2024 ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11வரைநடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்போட்டியின் மிகப் பெரிய விழாவாகியஆரம்ப வைபவத்தைப் பார்வையிடசுமார் ஆறு லட்சம் பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். அரங்கின் உள்ளே ஆசனங்களில் அமர்ந்து பார்ப்பது போன்று இல்லாமல் நதிக் கரையோரங்களிலும்வெளியே சுமார் 80 பிரமாண்டமானதிரைகளிலும் திறந்த வெளிக் காட்சிபோன்று (open-air theater of the spectacle) விழாவைக் கண்டு களிக்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். ஆனால், பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகள் தொடர்பான கவலைகள் இருப்பதால் அதற்கானபாரிய திட்டங்களை விவாதிப்பதற்கானகூட்டங்கள் இப்போதிருந்தே நடத்தப்படவுள்ளன.

பெரும் நிதிச் செலவில் ஸ்ரேடியங்களை அமைப்பதைவிடவும் இருக்கின்ற இடங்களைக் கலையழகு மிக்கவையாக மெருகூட்டிப் பொது வெளியில் விழாவைநடத்துவது ஒரு வரலாற்றுப் பெருமைஎன்று ஒலிம்பிக் ஏற்பாடுகளுக்குப்பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.பாரிஸ் நகரத்தின் வரலாற்று முக்கியத்துவம்மிக்க நொர்த் டாம் மாதா ஆலயம் (Notre Dame) முதல் லூவர் (Louvre) அருங்காட்சியகம் வரை சகலமையங்களும் விழா அலங்காரப்பகுதிகளாக மாறவுள்ளன.

வைரஸ் தொற்றுநோய், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றுபல சவால்கள் காத்திருக்கின்ற போதிலும் உலகெங்கும் இருந்தும் உள்நாட்டிலிருந்தும் வந்து திரளவுள்ள லட்சோபலட்சம் ரசிகர்களுக்கு மிக நெருக்கமாகவும், அவர்கள் வாழ்நாளில் காணக்கிடைத்திராத இந்திர ஜாலமாகவும் விழாவை நடத்துவதே தங்கள் நோக்கம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் பெருமைப்படுகின்றனர். உலகப் பெரும் தொற்று நோய்(Pandemic) 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒர் உள்ளூர் நோயாக மாறித் (endemic disease) தணியும் என்று பைசர் தடுப்பூசி நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் நானெட் கோசெரோ (Nanette Cocero)தெரிவித்திருக்கிறார். இதன் அர்த்தம்கோவிட்-19 வைரஸ் முற்று முழுதாக உலகத்தை விட்டு விலகிவிடும் என்பதல்ல.அது தடுப்பூசிக்குக் கட்டுப்பட்ட ஏனைய வைரஸ் தொற்று நோய்களைப்போன்று உலகில் ஆங்காங்கே நீடிக்கும்.ஆனால் ஆபத்தை உண்டுபண்ணாது.

இவ்வாறு உலகம் தொற்று நோயின்முடிவுக்காக 2024 ஐ எதிர்பார்த்துக் காத்திருக்க அதே ஆண்டில் ஒலிம்பிக் திருவிழாக் காணக் காத்திருக்கின்றது பாரிஸ் நகரம்.இந்தக் கட்டத்தில் விழாவின் மாதிரிக் காட்சிகள் வெளியாகிஇருப்பது விளையாட்டு உலகில் பெரும் உற்சாக ஊற்றைத் திறந்துவிட்டிருக்கிறது.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.