ஜோர்டான் அரசன் அப்துல்லாவின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றவரில் இருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.
ஏப்ரல் மூன்றாம் திகதி ஜோர்டான் நாட்டின் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாகக் குறிப்பிடப்பட்டு பதினெட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களைத் தவிர அரசன் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஹம்ஸாவும் அத்திட்டத்தில் பங்குபற்றியதாகக் குறிப்பிடப்பட்டு அவரது அரண்மனையிலேயே காவலில் வைக்கப்பட்டார்.
கைதுசெய்யப்பட்டவர்களில் பதினாறு பேரை ஜோர்டானிய அரசின் வழக்கறிஞர் நாயக அதிகாரம் விசாரித்துவிட்டு விடுவித்தது. இளவரசன் ஹம்ஸாவும் சில நாட்களின் பின்னர் தனது மூத்த சகோதரன் அப்துல்லாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டது. அவருக்கும் நேரடியாக ஆட்சிக் கவிழ்ப்பில் சம்பந்தமில்லையென்று பின்னர் அரச குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் சவூதிய அரசகுமாரனுக்குச் சம்பந்தம் இருந்ததாக அச்சமயத்தில் அரசல் புரசலாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனாலும், ஜோர்டானிய அரசனுக்குத் தனது முழு ஆதரவும் இருப்பதாக முதன் முதலில் தெரிவித்த நாடு சவூதி அரேபியாவாகும்.
கைதுசெய்து இதுவரை விடுவிக்கப்படாமல் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படப்போகும் இருவருமே சவூதிய அரசகுமாரன் முஹம்மது பின் சல்மானுக்கு நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோர்டானிய அரண்மனையின் முதலதிகாரியாக 2008 வரை கடமையாற்றிய பஸ்ஸாம் அவாதுல்லா, சவூதி அரேபியாவுக்கான ஜோர்டானின் பிரத்தியேக தூதுவர் ஷரிப் ஹஸன் பின் சாயத் ஆகியோரே அவர்களிருவருமாகும். இவர்களில் பஸ்ஸாம் அவாதுல்லா சவூதி அரேபியப் பிரஜாவுரிமை கொண்டவர்.
சாள்ஸ் ஜெ. போமன்