இரண்டாவது தடவையாக ஹஜ் யாத்திரை வெளிநாட்டவர்களுக்குத் தடை செய்யப்பட்டது.
தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட தனது நாட்டின் 60,000 பேர் மட்டுமே இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும் இவ்வருட ஹஜ் யாத்திரையை 18 – 65 வயதுக்குட்பட்டவர்களும் கடுமையான வியாதியால் பாதிக்கப்படாதவர்களும் மட்டுமே செய்யலாம்.
“சவூதி அரேபியாவில் வாழ்பவர்களும், சவூதியக் குடிமக்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மிகப் பெரும் மக்கள் கூட்டம் பல நாட்களுக்கு வெவ்வேறு இடங்களில் தங்கியிருப்பதற்கான வசதிகளுடனான துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகிறது. கொரோனாத் தொற்றுக்களின் வெவ்வேறு திரிபுகளை உலகம் நேரிடும் இச்சமயத்தில் நாம் யாத்திரை செய்பவர்களின் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்புக் கொடுப்பது அவசியமாகிறது,” என்கிறது சவூதி அரேபியாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு.
2019 இல் சுமார் 2.5 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் மோசமான நிலையில் பத்தாயிரம் பேருக்கு மட்டுமே அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது.
இவ்வருடத்தின் 60,000 பேர் தினசரி 20,000 பேராக புனித தலத்தினுள் மூன்று நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். காபா என்று அழைக்கப்படும் கறுப்புக் கல்லைத் தொடுவதற்கு எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பரவிவரும் கொடும் வியாதி முற்றாக மறையும் காலத்தில் மீண்டும் எல்லோரும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்