சிங்க இறால் பிடிக்கப் போனவரைத் தனது வாய்க்குள் அள்ளியெடுத்துத் துப்பிய திமிங்கலம்.

மஸாசூசெட்ஸ், கேப் கொட் பகுதியில் சிங்க இறால் பிடிப்பதற்காகக் கடலுக்குள் மூழ்கினார் 56 வயதான மைக்கல் பக்கார்ட். லொப்ஸ்டர் என்றழைக்கப்படும் அந்த நட்டு இறால் வகை மிகவும் விலையுயர்ததாகும். 14 மீட்டர் ஆழத்தில் மூழ்கி கடல் மட்டத்து மணற்பரப்பில் அவைகளைப் பிடிப்பது அவரது தொழிலாகும். வெள்ளியன்று இரண்டாவது தடவையாக கடலுக்குள் மூழ்கியவர் திடீரென்று ஒரு தாக்குதலையும், அதையடுத்து எல்லாமே இருட்டானதையும் உணர்ந்தார்.

நடந்தது என்னவெனில் மைக்கல் பக்கார்ட்டை ஒரு திமிங்கலம் தனது வாய்க்குள் அள்ளியெடுத்துவிட்டது. 

“நான் அதன் வாய்க்குள் முழுசாக இருந்ததை உணர்ந்தேன். அதன் வாயின் தசை நார்கள் அசைந்ததை என்னால் உணரமுடிந்தது. இதற்குள்ளிருந்து நான் தப்ப முடியாது. எனது கதை முடிந்தது, என்று நான் எனது இரண்டு மகன்களையும் நினைத்தேன்,” என்கிறார் மைக்கல் பக்கார்ட்.

40 வருடங்களாக இதே தொழிலில் இருந்துவரும் அவருக்கு 15, 12 வயதில் மகன்கள் இருவர் இருக்கிறார்கள். இது நடக்கும்போது அந்தக் கடற்பரப்பில் ஆங்காங்கே மீன்பிடிப் படகுகள் நின்றன. மைக்கலின் சகா ஜோசாயா மாயோவும் ஒரு படகிலிருந்தார். திமிங்கலம் நீர்மட்டத்துக்கு வெளியே தலையெடுத்து மைக்கலைத் துப்பியதை ஜோசாயா கண்டிருக்கிறார். நீருக்குள் வந்து மீண்டும் விழுந்த சகாவை அவர் காப்பாற்றி தனது படகுக்குள் ஏற்றியதாகக் குறிப்பிடுகிறார்.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலிருக்கும் கதையில் ஜோனாவைத் தண்டிக்கக் கடவுள் அவர் கடலில் மீன்பிடிக்கப் போனபோது பெரும் சூறாவளியை உண்டாக்கினார். ஜோனா படகிலிருந்து நீருக்குள் எறியப்பட திமிங்கலமொன்று அவரை முழுசாக விழுங்கியது. அதன் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்து ஜோனா செபித்துத் தனது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டார். அதன் பின் கடவுளின் ஆணையின் பேரில் ஜோனாவை அந்தத் திமிங்கலம் வெளியே துப்பியதாக அக்கதை குறிப்பிடுகிறது.

மைக்கல் பக்கார்ட் சுமார் 30 – 40 வினாடிகள் திமிங்கலத்தின் வாய்க்குள் இருந்ததாகத் தெரியவருகிறது. 

குறிப்பிட்ட வகை [humpback whale] திமிங்கலங்களுக்குப் பற்கள் கிடையாது. சுமார் 250 – 400 தசைகள் போன்றவை வாய்க்குள்ளிருந்து தொங்கிக்கொண்டிருக்கும். அவை நீருக்குள் உணவுக்காக வாயைத் திறந்து விழுங்கும்போது என்ன எதுவென்று கவனிப்பதில்லை. அவை மனிதர்களுடன் ஆக்ரோஷத்துடன் நடந்துகொள்வதுமில்லை. கேப் கொட் டைம்ஸ் பத்திரிகைக்கு திமிங்கல ஆராய்ச்சியாளர் ஜூக் ரொபின்ஸ் நடந்த சம்பவம் பற்றி விளக்கமளித்திருக்கிறார்.

குறிப்பிடத்தக்க காயங்கள் ஏதுமில்லாத மைக்கல் பக்கார்ட் அருகிலுள்ள நகர மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *