ஹமாஸ் அமைப்புடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு மீண்டும் காஸா மீது விமானத் தாக்குதல்.
சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலுக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை காஸாவில் ஆட்சி நடாத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் மதிக்கவில்லை என்று இஸ்ராயேல் குற்றஞ்சாட்டியது. அதனால் இஸ்ராயேலிய விமானங்கள் மீண்டும் காஸா பிராந்தியத்தின் மீது வான்வெளித்தாக்குதல் நடாத்தியதாக இஸ்ராயேலின் இராணுவம் இன்று காலையில் அறிவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் இயக்கத்தினர் பலூன்கள் மூலம் நெருப்புக் குண்டுகளை இஸ்ராயேலின் தென் பாகத்தின் மீது செலுத்தியதாக இஸ்ராயேல் குறிப்பிட்டது. செவ்வாயன்று மாலை இஸ்ராயேலை நோக்கிப் பறந்து வந்த அந்த நெருப்புக் குண்டுகளால் சுமார் 20 தீ விபத்துக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தனது நடவடிக்கைக்குக் காரணமாக ஹமாஸ் பழைய ஜெருசலேம் நகரினூடாக யூதர்கள் பேரணியொன்றை நடாத்த இஸ்ராயேலிய அரசு அனுமதித்ததைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்லாத்தின் புனித தலமான அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு அருகே குறிப்பிட்ட யூத ஊர்வலம் நடாத்த அனுமதிக்கப்பட்டது இஸ்ராயேலிய அரசின் தவறு என்று ஹமாஸ் சுட்டிக் காட்டுகிறது.
எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவான அசம்பாவிதங்களுடன் ஊர்வலம் நடந்து முடிந்ததாகத் தெரியவருகிறது. ஜெருசலேமில் வாழும் பாலஸ்தீனர்களையும் கலவரங்களில் ஈடுபடுமாறு ஹமாஸ் இயக்கத்தினர் உசுப்பேத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயன்று இரவு இஸ்ராயேலிய வான்படையின் தாக்குதலால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி இதுவரை தெரியவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்