கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும் சட்ட ஒழுங்குகளைப் பாவனைக்குக் கொண்டுவந்தார்கள். “பரவலாக கொரோனாத் தொற்றுக் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது,” என்கிறது டிரன்ஸ்பரன்ஸி இண்டர்நஷனல் அமைப்பின் ஆராய்ச்சி அறிக்கை.

இந்த ஆராய்ச்சியில் ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 40,000 பேர் பங்குபற்றினார்கள். சில நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவையில் லஞ்ச ஊழல்கள் அதிகமாகியிருந்தது. முக்கியமாக ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, லித்வேனியா ஆகிய நாடுகளில் ஐந்தில் ஒருவர் தமது மருத்துவ சேவைகளுக்காக லஞ்சங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதைத் தவிர ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் கிரீஸிலும் சிலர் அதைச் செய்திருக்கிறார்கள்.

செக் குடியரசு, போர்த்துகல், ஹங்கேரி ஆகிய நாடுகளில் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக 29 விகிதத்தினர் தமது நண்பர்கள், உறவினர்களைப் பாவித்திருக்கிறார்கள்.

போலந்து, ஹங்கேரி ஆகிய நாட்டின் அரசுகள் கொரோனாத் தொற்றுக் காலத்தைப் பாவித்து மக்களின் ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைப் பாவனைக்குக் கொண்டுவந்தன. ஜேர்மனியில் அச்சந்தர்ப்பதை அரசியல்வாதிகள் சிலர் பாவித்துத் தமது சொந்த வருமானத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களில் மூன்றிலொருவர் தமது நாட்டில் லஞ்ச ஊழல்கள் அதிகரித்திருப்பதாகவும் அதற்கு எதிராகத் தமது அரசுகள் செயற்படுவது குறைவு என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பல்கேரியா, இத்தாலி, சைப்பிரஸ், கிரவேசியா, போர்த்துகால், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் தமது அரசுகள் லஞ்ச ஊழல்களில் ஈடுபடுவது அதிகரித்திருப்பதாக 85 % பேர் குறிப்பிடுகிறார்கள். ஸ்லோவாக்கியாவில் மட்டும் மக்கள் [39 %] நாட்டில் லஞ்ச ஊழல்கள் குறைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தினரில் 50 விகிதமானோர் தமது நாட்டின் பெரிய நிறுவனங்கள் வரிகள் செலுத்துவதில் தில்லுமுல்லுகள் செய்வதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சர்வதேச ரீதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் லஞ்ச, ஊழல்களுக்கு எதிராகப் பெருமாலும் குரலெழுப்புபவை. கொரோனாக் காலத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமையும், மக்களின் கருத்துகளும் அந்த நாடுகளின் அரசுகளுக்கு ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரவேண்டுமென்று டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *