இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால் குறைவாக இருக்கிறது. சுமாராக 6 விகிதத்தை விடக் குறைவாக இருந்தால் அது விசனத்துக்கு உரியதே என்று குறிப்பிடப்படுகிறது.

ஏப்ரல் 10 ம் திகதியில் தடுப்பூசி பெற்ற ஆண்களுடைய எண்ணிக்கை 2 விகிதத்தால் அதிகமாக இருந்தது. ஏப்ரல் 24 ம் திகதியில் அது 12 விகிதமாக அதிகரித்து மே 6ம் திகதியன்று 24 விகிதமாக அதிகரித்திருந்தது. ஜம்மு – காஷ்மீர், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வித்தியாசத்தில் முதல் மூன்று இடங்களையும் பெறுகின்றன.

கேரளா, சட்டிஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்டோரில் பெரும்பாலானோர் பெண்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மருத்துவ சேவை அடிப்படையிலேயே பெண்களைப் பின்னால் தள்ளுவதே இந்த நிலையின் முதற் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் சமூக ரீதியிலும் பெண்களை விட ஆண்களுக்கே சகலத்திலும் முதன்மை கொடுக்கப்படுகிறது. டிஜிடல் அறிவிலும் பெண்கள் பின் தங்கியிருக்கிறார்கள். கைப்பேசி வைத்திருப்பவர்களிலும் பெரும்பாலானோர் ஆண்களே. அதன் மூலம் தான் செயலியைப் பயன்படுத்தித் தடுப்பு மருந்துக்குப் பதிவுசெய்துகொள்ளமுடியும். 

அதைத் தவிரத் தடுப்பு மருந்துகள் பெண்களின் பிள்ளைப் பெறுதலைக் கட்டுப்படுத்துகிறது போன்ற பொய்யான வதந்திகளும் பரப்பப்படுகின்றன. 

காலதாமதமாகவே இந்த வித்தியாசத்தைப் பற்றி இந்திய அரசு கவலையுற ஆரம்பித்திருக்கிறது. பெண்களை அதிக அளவில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் சிந்திக்கப்படுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *