உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் ஓரளவு பரவலாகக் கொடுக்கப்படுகின்றன. பின் தங்கி மாட்டிக்கொண்டிருக்கும் ஆபிரிக்காவிலோ தொற்றுக்களின் பரவல் அதி வேகமடைந்திருப்பதாகத் தெரிகிறது.

ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கோவக்ஸ் திட்டத்தினூடாகவும், மனிதாபிமானத் திட்டங்கள் மூலமாகவுமே தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன. பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளிடம் சொந்தமாகத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளோ, திட்டங்களோ இல்லை. கிடைக்கும் தடுப்பு மருந்துகளை நாடெங்கும் கொடுக்க அடிப்படையான சுகாதார வசதிகளும் பல ஆபிரிக்க நாடுகளில் இல்லை. அதனால், வேகமாகத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுவதும் குதிரைக்கொம்பானது. அதே சமயம் பணக்கார நாடுகளிடமிருந்து கிடைக்கும் தடுப்பு மருந்துகளில் ஒரு பகுதி பாவனைக்குரியதல்ல என்ற குற்றச்சாட்டும் ஆபிரிக்க நாடுகளாலும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

https://vetrinadai.com/news/rich-countries-africa-vacc/

வட ஆபிரிக்க நாடுகள் உட்பட ஆபிரிக்கக் கண்டத்தில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து மில்லியன்களைத் தாண்டிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 135,000 பேர். அந்த எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பினும் தற்போது பரவிவரும் வேகம் பலரையும் திகைக்கவைப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 

சர்வதேச அளவில் சமீப வார்த்தில் கொவிட் தொற்றுக்கள் உலகளவில் 14 % குறைந்திருக்கிறது. ஆபிரிக்காவிலோ 30 % ஆல் அதிகரித்திருக்கிறது. உலகிலேயே படு வேகமாகக் கொவிட் பரவும் நாடு தற்போது ஸாம்பியாவாகும். அங்கே வாரத்துக்கு 147 % தொற்றுக்கள் அதிகரிக்கின்றன. தினசரி 1,200 புதிய தொற்றுக்கள் காணப்படுகின்றன. அதைத் தவிர உகண்டா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் தொற்றுக்களின் வேகம் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

ஆபிரிக்காவில் 58,000 இறப்புக்களைச் சந்தித்த தென்னாபிரிக்காவில் தற்போது மூன்றாவது அலையாகக் கொவிட் 19 பரவிவருவதாக அறிவிக்கப்படுகிறது. நாட்டின் 1 % மக்களுக்கே இதுவரை அங்கே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதில்லை என்று தென்னாபிரிக்கா முடிவு செய்திருந்தது. பதிலாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் 2 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்கியிருந்தது. ஆனால், அவைகளின் தயாரிப்பில் தவறிருப்பதால் அவைகளையும் பாவிக்க முடியாதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தடுப்பு மருந்துகள் போடுவதைப் பொறுத்தவரை உலகில் சராசரியாக 100 பேரில் 30 பேருக்கு அது போடப்பட்டிருக்கிறது. ஆபிரிக்காவிலோ 100 பேரில் 2.9 பேருக்கே இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஜி 7 நாடுகளின் மாநாட்டில் கோவக்ஸ் அமைப்புக்குக் கொடுக்கப்படப் போவதாகக் குறிப்பிடப்பட்ட தடுப்பு மருந்துகள் ஆபிரிக்காவுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுமென்று ஐ.நா குறிப்பிட்டிருக்கிறது. அது நிஜமாகிறதா என்பதே அடுத்த கேள்வியாக இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *