விளாசிச், மூட்ரிச், பெரிசிச் மூவரும் சேர்ந்து நிலை குலைந்திருந்த கிரவேசிய அணியை அடுத்த மட்டத்தில் சேர்த்தார்கள்.
ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் செவ்வாயன்று நடந்த மோதல்களில் D குழுவின் நான்கு அணிகள் பங்குபற்றின. ஏற்கனவே அடுத்த மட்டத்துக்குத் தயாராகியிருந்த இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதியதில் 1 – 0 என்று முடிவடைந்தது. ரஹீம் ஸ்டேர்லிங் இங்கிலாந்தைக் குழுவின் முதலிடத்துக்குக் கொண்டுசெல்லும் பந்தை வலைக்குள் போட்டார்.
மோதலின் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்த இங்கிலாந்து – செக் குடியரசு மோதல் படிப்படியாக சுவாரஸ்யமில்லாது போயிற்று. தனது வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து பெரும்பாலும் பாதுகாப்பு அரணை நிலை நாட்டுவதிலேயே கவனமெடுத்தது. செக் குடியரசின் வீரர்கள் பல தடவைகள் முயற்சித்தும் அவர்களால் எதிர்க்குழுவைத் தாக்கி மோதலுக்கு உயிர்கொடுக்க முடியவில்லை.
உலகக் கோப்பைப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்ற கிரவேசியா அந்தப் பெருமையைக் காப்பாற்றும் விதமாகத் தனது முதலிரண்டு மோதல்களிலும் விளையாடவில்லை. அத்துடன், ஸ்கொட்லாந்துடன் தோல்வியடைந்தால் அடுத்த மட்டத்துக்கும் போகமுடியாது என்ற நிலைமை. அதனால் தானோ என்னவோ அக்குழுவினர் புதிய சக்தி பெற்று விளையாடினார்கள்.
நிக்கொலா விளாசிச், இவான் பெரிசிச் மட்டுமன்றி கிரவேசியாவின் உதைபந்தாட்ட வால் நட்சத்திரம் என்று கருதப்படும் லூகாஸ் மூட்ரிச்சும் ஆளுக்கொரு தடவை ஸ்கொட்லாந்தின் வலைக்குள் பந்தைப் போட்டார்கள். ஸ்கொட்லாந்துக்காக கலும் மக்கிரேகர் பந்தை வலைக்குள் போட்டார்.
இன்று புதன் கிழமை நாலு மோதல்கள் நடக்கவிருக்கின்றன. அவைகளுடன் யூரோ 2020 க்கான முதல் கட்டப் போட்டிகள் முடிவடைய இரண்டு நாட்கள் ஓய்வு நாட்களாக இருக்கும்.
ஸ்பெய்ன் – ஸ்லோவாக்கியா, ஜேர்மனி – ஹங்கேரி, சுவீடன் – போலந்து, பிரான்ஸ் – போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கிடயே இன்று மோதல்கள் நடக்கவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்