நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள்
செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய, உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரகாசிக்க முடியாத நெதர்லாந்து நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட வீரர்களுடன் இம்முறை ஐரோப்பியக் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கையிலிருந்தது.
ஞாயிறன்று தமது மோதலின் ஆரம்பத்தில் திறமையாக விளையாட ஆரம்பித்த நெதர்லாந்தின் வீரர்கள் முதல் அரை மணி நேரத்துக்குள்ளேயே செக்கியர்களிடம் விளையாட்டை இழந்துவிட்டார்கள் எனலாம். முழுசாக முடிக்காத தாக்குதல்கள், ஒழுங்கில்லாத வகையில் பந்தை அடித்தல் போன்றவைகளால் நெதர்லாந்து அணி தடுமாறியது.
செக்கியர்களோ பலமான பாதுகாப்பு அரணுடன் அகப்பட்ட நேரமெல்லாம் எதிராளிகளைத் தாக்கியபடியே இருந்தார்கள். மோதல் மெதுவாக சுவாரஸ்யமிழக்கும் நேரத்தில் பாதி நேரம் முடிந்துவிட்டது. ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் களத்திலிறங்கிய செக்கியர்கள் புதிய தன்னம்பிக்கையுடன் நெதர்லாந்துக்கு இணையாக விளையாட ஆரம்பித்தார்கள்.
பத்தே நிமிடங்களில் தமது பக்கத்தில் வந்த பந்தைக் குனிந்து விழுந்து கையால் தொட்டதால் நெதர்லாந்து வீரரொருவருக்குக் கடுமையான தண்டனை கொடுத்து வெளியே அனுப்பினார் நடுவர். அதன் பின்னர் மேலும் பலமான உடல்ரீதியான தாக்குதல்கள் இரண்டு பக்கங்களிலும் சரமாரியாக ஆரம்பித்தன. தமது விளையாட்டு நுட்பத்தைக் காட்டாத டச் வீரர்கள் தடுமாற ஆரம்பிக்க ஏற்கனவே மோதல்களில் பந்தை வலைக்குள் அனுப்பிய செக்கிய வீரர் ஷிக் தனது நாலாவது கோலையும் போட்டார். தோமஸ் ஹோல்ஸ் – பாற்றிக் ஷிக்கின் இரண்டு கோல்களுடன் நெதர்லாந்து தோல்வியின் பாரத்தைச் சுமந்து வெளியேறியது.
சாள்ஸ் ஜெ. போமன்