கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு.

வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அந்தத் துப்பாக்கி யாருடையதென்று ஆராய்ந்ததில் அது வெனிசுவேலாவின் இராணுவத் துப்பாக்கி என்று கொலம்பியாவின் பொலீஸ் தெரிவித்திருக்கிறது.

அந்த இரண்டு நாடுகளும் நீண்ட காலமாகவே ஒருவரையொருவர் எல்லை மீறல்களுக்காகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. அத்துடன் வெனிசுவேலா தனது நாட்டின் போதைப்பொருள் தயாரிப்பாளர்களையும், அரசுக்கெதிராக இயங்குபவர்களையும் பாதுகாத்து உற்சாகப்படுத்தி வருவதாக கொலம்பியா குற்றஞ்சாட்டி வருகிறது. 

வெனிசுவேலாவும் தனது நாட்டின் எதிரிகளுக்குக் கொலம்பியா உதவுவதாகக் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான எல்லையை அடுத்துள்ள நகரங்களில் இரண்டு நாட்டின் இராணுவங்கள், போதைப் பொருட்களைத் தயாரிக்கும் வெவ்வேறு குழுக்கள், ஆயுதமேந்திய அரசியல் குழுக்கள் போன்ற பல பகுதியார் சமீப மாதங்களில் தம்மிடையே கடும் போரில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு நாடுகளுக்குமிடையே உத்தியோகபூர்வமான போர் இல்லாவிட்டாலும் எல்லையிலிருக்கும் இராணுவங்கள் போரில் ஈடுபடுவது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டு நாடுகளின் உறவு மோசமாகிக்கொண்டிருக்கிறது.

கொலம்பியாவின் ஜனாதிபதி இவான் டுக்கியாவுடன் இரண்டு முக்கிய அமைச்சர்களும் அந்த ஹெலிகொப்டரில் பயணம் செய்தார்கள். தாக்கப்பட்ட ஹெலிகொப்டரின் விபரமான படங்களை கொலம்பியப் பொலீஸ் பத்திரிகையாளர்களுக்கு விநியோகம் செய்திருக்கிறது. இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளால் அதை நோக்கிக் குண்டுகள்  பொழியப்பட்டதாகவும் அவைகளில் ஒன்று வெனிசுவேலாவின் இராணுவம் பாவிக்கும் ஆயுதம் என்று காட்டப்பட்டிருப்பது இரண்டு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் மேலும் மோசமாக்கலாம் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *